Posts

Showing posts from June, 2020

இனிய உணர்வே என்னைக் கொல்லாதே -லட்சுமி

________________________________ இனிய உணர்வே என்னைக் கொல்லாதே (லட்சுமி) _________________________________       இந்தப் புதினம் "தேவி " வார இதழில் தொடர்கதையாக வெளிவந்து இலட்சக்கணக்கான வாசகர்களின் நெஞ்சங்களைக் கொள்ளை கொண்டதாகும்.        கதையின் நாயகி சாம்பவி.. நாயகன் பார்த்தீபன்.. இருவருக்கும் பல கடினமான சோதனைகளைக் கடந்து திருமணம் நடைபெறுகிறது.        ஆனால் சாம்பவி கணவனுடன் வாழ இயலாமல் முட்டுக்கட்டையாக இருக்கிறாள் மாமியார்.அவர் மனம் மாறி தன்னை மருமகளாக ஏற்கும் வரை, தன் இனிய உணர்வுகளின் துணை கொண்டு இல்லறம் நடத்துகிறாள்.          உலகில் அன்பினால் எதையும்  சாதிக்க முடியும் என்பதை இந்நூலை வாசிப்பவர்கள் உணர்வார்கள்.                (விலை : ரூ 145)                (பூங்கொடி பதிப்பகம்)

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்

_____________________________ தமிழ்ப் பழமொழிகள் (கி.வா.ஜகநாதன்) ______________________________        நாடோடி இலக்கிய வகையைச் சார்ந்தவை பழமொழிகள்.சிறுவர் முதல் முதியவர்கள் வரை யாவரும் தாம் பேசும் போது பழமொழிகளைப் பயன்படுத்துவர்.அவரவர் அனுபவத்திற்கேற்ப அவை இருக்கும்.        இந்நூலில் ஏறத்தாழ 25000 பழமொழிகள் உள்ளன.கி.வா.ஜ அவர்கள் சொற்பொழிவிற்காக வெளியூர் சென்ற காலங்களில் அங்கே உள்ள ஆடவரிடமும், பெண்மணிகளிடமும் கேட்டு சேகரித்ததாகக் கூறுகிறார்.         தமிழ் மக்களுடைய எண்ணம் எவ்வாறு படர்ந்தது என்பதை இப்பழமொழிகள் காட்டுகின்றன.        பல பல துறைகளில் அமைந்த இந்தப் பழமொழிகள் அறிவைத் தூண்டுபவையாக அமைந்துள்ளன.              (விலை : ரூ 100)              (ஜெனரல் பப்ளிஷர்ஸ்)

வேள்வித் தீ - எம்.வி.வெங்கட்ராம்

வேள்வித் தீ (எம்.வி.வெங்கட்ராம்) ___________          ஒரு நெசவாளியின் கஷ்ட ஜீவனத்தை ஆழ அகலங்களுடன் சொல்லும் புதினமாக மட்டும் இது நின்றிருந்தில், காலவோட்டத்தில் காணாமல் போன புதினங்களில் ஒன்றாகக் கரைந்து போயிருக்கும்.         அப்படியின்றி புற வாழ்வின் சவால்களுக்கு நடுவிலும் மூன்று கதாப்பாத்திரங்களுக்கும் இடையிலுமான மனப்போராட்டத்தை நுட்பமாகவும், நேர்த்தியாகவும் குறிப்பாக எதார்த்தமாகவும் கொண்டிருப்பதன் காரணமாக இன்றும் இப்புதினம் பொருட்படுத்தத்தக்கதாக அமைந்துள்ளது.                   (விலை : ரூ 125)                   (காலச்சுவடு பதிப்பகம்)

லேடீஸ் ஹாஸ்டல் - எண்டமூரி வீரேந்திரநாத், தமிழில்..கௌரி கிருபானந்தன்

லேடீஸ் ஹாஸ்டல் (எண்டமூரி வீரேந்திரநாத்) தமிழில்..கௌரி கிருபானந்தன் __________________________________           எண்டமூரி வீரேந்திரநாத் அவர்கள், ஒவ்வொரு புதினத்திலும் ஏதாவது ஒரு துறையைக் கையாண்டு எழுதுவார்கள்.ஒவ்வொரு துறை பற்றிய பல செய்திகளை சேகரித்து நமக்கு வழங்குவார் .அதனால் பல அரிய தகவல்களை நாம் தெரிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படுகிறது.         இப்புதினத்தின் நாயகன் (ராயன்னா)  கிரிக்கெட் வீரன்.நாயகி (கிரண்மயி)  "சைக்காலஜி " மாணவி . அத்துறைகளைப் பற்றிய பல அரிய தகவல்களைத் தந்து, தீர்க்க முடியாத பல பிரச்சனைகளை எப்படி மனிதநேயத்தால் தீர்க்கலாம் என்று மிக அழகாகக் கூறியுள்ளார்.           நமது நாட்டின் கலாச்சாரத்தை மதிக்காத மாணவ, மாணவிகளின் நிலையையும் அழகாக எடுத்துக்காட்டியுள்ளார்.                 ( விலை : ரூ 240)                (அல்லயன்ஸ் கம்பெனி)

உடையார் - பாலகுமாரன்

உடையார் (பாலகுமாரன்) _____________________________        ஆறு பாகங்களை உடையது.177 அத்தியாயங்களைக் கொண்ட வரலாற்றுப் புதினம். இதயம் பேசுகிறது வார இதழில் தொடர்கதையாக வெளிவந்தது.        தஞ்சை பெரிய கோயில் கட்டப்பட்ட வரலாற்றை கற்பனை நயத்தோடு, மாமன்னன் ராஜ ராஜ சோழனை நாயகனாகவும், அவர் மனைவி பஞ்சவன் மாதேவியை நாயகியாகவும் கொண்டு எழுதப்பட்டது.       கோயில் கட்ட எடுத்துக் கொண்ட முயற்சிகள் மற்றும் கட்டப்பட்ட விதம் இவையே கதைக்களம்.       ராஜராஜன் கோயில் கட்டியதால் மட்டுமல்லாமல், நிலவரி, கிராம சபை, குடவோலை முறை மற்றும் பல சமுதாய முன்னேற்றங்கள் செய்ததாலும் அதைப் பற்றியெல்லாம் எழுத வேண்டும் என்ற ஆவலில் எழுந்த புதினமாகக் கூறுகிறார் ஆசிரியர்.         உள்மன அலசல்...          (விசா பப்ளிகேஷன்ஸ்)

மகேந்திரவர்மன் - மயிலை.சீனி.வேங்கடசாமி

மகேந்திரவர்மன் (மயிலை.சீனி.வேங்கடசாமி) ______________________________        ஒவ்வொரு நாட்டுக்கும் அந்தந்த நாட்டின் வரலாறுகள் மிகவும் முதன்மையானதாகும்.ஐரோப்பியர் நமது நாட்டிற்கு வந்த பின்னரே, வரலாறு எழுதும் வழக்கம் நமக்கு ஏற்பட்டது.         ஏறத்தாழ கி.பி 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 9 ஆம் நூற்றாண்டு வரையில் பல்லவ அரச பரம்பரையினர் தொண்டை மண்டலத்தையும், சோழ மண்டலத்தையும் அரசாண்டு வந்தனர்.          மகேந்திரவர்மன் வாழ்ந்த காலம் கி.பி 7 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியாகும். இவன் பேரும் புகழும் படைத்த அரசனாக மட்டும் வாழவில்லை.சிற்பம், ஓவியம், காவியம், இசை முதலிய நற்கலைகளைக் கற்ற கலைச் செல்வனாக விளங்கினான்.      முதன்முதலாக தமிழ்நாட்டில் குகைக்கோயில்கள் அமைத்தவன்."மத்தவிலாசப்   பிரஹசனம் " என்னும் நாடக நூலை எழுதியவன்."குணபரன், சித்ரகாரப்புலி, விசித்ரசித்தன் "  இன்னும் 30 க்கும் மேற்பட்ட சிறப்புப் பெயர்களைப் பெற்றவன்.இவன் அளித்த கலைச்செல்வங்கள் தமிழத்தின் பல்வேறு பகுதிகளில் இவன் புகழ்பாடுகின்ற...

நெகிழும் வரையறைகள் .. விரியும் எல்லைகள்.. - அரவிந்தன்

நெகிழும் வரையறைகள் .. விரியும் எல்லைகள்.. (அரவிந்தன்) ________________________________        சமகால தமிழ் இலக்கியத்தின் பல்வேறு சலனங்களைக் கூர்மையான பார்வையோடு அணுகும் கட்டுரைகள் இவை.       நூல்கள், படைப்பாளிகள், இலக்கியப் போக்குகள்  ஆகியவற்றினூடே பயணிக்கும் ஆசிரியரின் அணுகுமுறை படைப்பைச் சிறப்புடையதாக்குகிறது.       அசோகமித்திரன், சுந்தர ராமசாமி, ஆ.ரா.வேங்கடாஜலபதி உள்ளிட்ட எழுத்தாளர்களின் ஆக்கங்கள் பற்றிய விரிவான அலசல்கள் இந்நூலில் உள்ளன.       1990 களுக்குப்பின் பிந்தைய நவீன இலக்கியப் போக்குகளின் முக்கியக் கூறுகளை அவற்றின் பின்புலத்தோடும், தாக்கங்களோடும் அணுகும் கட்டுரைகளும் உள்ளன.                  (விலை : ரூ 225)                  (காலச்சுவடு பதிப்பகம்)

பாய்மரக் கப்பல் - பாவண்ணன்

பாய்மரக் கப்பல் (பாவண்ணன்) _____________________________        வாழ்க்கை என்னும் மாபெரும் கடலில் பயணத்தைத் தொடங்கிய ஒரு விவசாயியின் வம்ச வரலாறு.          இதில் வரும் காசாம்பு, முத்துசாமி, முனுசாமி, ரங்கசாமி, ஆறுமுகம் ஆகியோரை இந்த தேசத்தில் எங்கும் காணலாம்.        மனிதனின் வாழ்க்கையைக் கலைப் பண்புகளுடன் சித்தரித்துள்ளார் ஆசிரியர்.         காலத்தின் நகர்தலை கதையாக்கி உள்ளார்.                (விலை : ரூ 180)                (காவியா பதிப்பகம்)

தலைகீழ் விகிதங்கள் - நாஞ்சில் நாடன்

தலைகீழ் விகிதங்கள் (நாஞ்சில் நாடன்) _______________________________         ஒரு இளைஞனின் வாழ்க்கையை மகிழ்ச்சி, வறுமை, கோபம், துக்கம், அகங்காரம் என எத்தனை மனித உணர்ச்சிகள் உண்டோ அத்தனையையும் உள்ளது உள்ளபடி பேசுகிறது இந்நூல்.         வசதியானவன் வீட்டில் பெண்ணெடுத்தவன் படும்பாடும், சுயமரியாதைக்காக அவன் படும்பாடும் ..என ஒரு முழு வாழ்க்கையை கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறார் ஆசிரியர்.       மனித மனதின் வக்கிரங்களையும், எதிர்பார்ப்புகளையும், பிறர்படும் கஷ்டங்களைப் பார்த்து மற்றவர்கள் கொள்ளும் சந்தோசங்களையும் சாதாரண பார்வையாளராகப் பார்த்து நமக்குச் சொல்கிறார்.         கதை படிக்கும் நமக்கு பகீர் என்கிறது.  ஏனெனில் அந்தக் கதையில் வருபவர்கள் நம்மைப் போன்றவர்களே அன்றி வேறுயாருமல்லர். வாசிக்காதவர்கள் உடனே வாசியுங்கள். ஒரு அழகான வாசிப்பனுபவத்தை பெறுவீர்கள்.              (விலை : ரூ 170)               (விஜயா பதிப்பகம்)

நினைவுப்பாதை - நகுலன்

நினைவுப்பாதை (நகுலன்) ___________________________      கட்டுப்பாடற்ற மனவோட்டங்களை முழுக்கவும் நனவோடை உத்தியில், மரபும் நவீனமும் இழையோடும் மொழிநடையில் அமைந்த நூல் இது.        கதை கூறும் முறையிலும்.. பேசுவது போல் அனாயசமாக எழுதிக் கொண்டு செல்வதிலும்..வெளியாகும் ஆசிரியரின் தன்மை அழகாக்கப்பட்டுள்ளது என்று நகுலன் அவர்களின் "நிழல்கள் " புதினத்தின் முன்னுரையில் சுந்தர ராமசாமி கூறுவது இந்தப் புதினத்துக்கும் பொருந்தும்.               (விலை : ரூ 190)               (நற்றிணை பதிப்பகம்)

காலந்தோறும் பெண் - ராஜம் கிருஷ்ணன்

காலந்தோறும் பெண் (ராஜம் கிருஷ்ணன்) ____________________________         காலந்தோறும் பெண்ணின் நிலை, எப்படி வந்திருக்கிறது என்பதை இந்திய வரலாற்றில்.. மதநூல்கள் தொடங்கி மேற்கத்திய ஆய்வுகள், அம்பேத்கரின் எழுத்துகள் மற்றும் சமகாலப் பெண்கள் பிரச்சனைகளிலிருந்து அணுகும் ஒரு சமூக ஆய்வு நூல் இது.          வேதங்கள், திருமணச் சடங்குகள், மதகுருமார்கள் எப்படி பெண்ணை அடிமைத்தனம் என்னும் பாசிக்குட்டையில் பிணித்து வைத்திருந்தனர் என்பதை ஆதாரங்களுடனும், அறச்சீற்றத்துடனும் முன் வைக்கும் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.              (விலை : ரூ 175)              (காலச்சுவடு பதிப்பகம்)

என் சரித்திரம் - உ.வே.சாமிநாதய்யர்

என் சரித்திரம் (உ.வே.சாமிநாதய்யர்) _____________________________       பல்வேறு நுட்பங்களையும், உள்ளடுக்குகளையும் கொண்டு பயில்வோருக்கு புதுப்புது கோணங்களைக் காட்டியபடி காலத்திற்கேற்ப புதிதாகி மிளிர்ந்து கொண்டே இருக்கும் சிறப்புடையது இந்நூல்.       தன் வரலாற்று நூல்களுக்கு வகை மாதிரியாக விளங்கும் நூல்.       சமூக வரலாறு, கல்வி வரலாறு, உரைநடை வரலாறு உள்ளிட்டவற்றிற்கு குறிப்பிட்டத்தக்க பங்களிப்பைச் செய்திருக்கிறது இந்நூல்.       எளிதாகவும், ஆர்வத்துடனும் வாசிப்பதற்கேற்ற மொழிநடையில் எழுதப்பட்டிருக்கும் இந்நூலை வாசிப்பது மட்டுமல்ல...இதனோடு நட்பு கொள்வதும் நம் கடமை..                (விலை : ரூ 375)                (விகடன் பிரசுரம்)

மின்னல் மழை மோகினி - ஜாவர் சீதாராமன்

மின்னல்  மழை  மோகினி (ஜாவர் சீதாராமன்) ________________________________      மழைக்காலத்தில், மலையாளத்து மலைப்பாதையில் பேருந்து விபத்துக்குள்ளானதில், தாயை இழந்து அந்தப் பகுதியில் வாழும் நாராயணியம்மாள் வீட்டுக்கதவை தட்டும் நான்கு வயதான குழந்தை மோகினி..          மோகினியை தன் பெண்ணென வளர்க்கும் நாராயணி அம்மாள்.. தன் சந்ததியினர் செல்வமுடன் வாழ வேண்டும் என்ற ஆசையில் தீய வழியில் பொருள் சேர்க்கும் வெங்கடபதி..மகன் ராஜீ..மருமகள் விஜயா, பேத்தி கௌரி,  அண்ணனுக்காக  சிறை செல்லும் அழகிரிசாமி... என்ற வித்தியாசமான கதாப்பாத்திரங்களின் மூலம் பின்னப்பட்ட அருமையான கதை.       இயற்கையான மின்னல், மழை தோன்றும் போதெல்லாம் மோகினியின் வாழ்வில் ஒரு திருப்பம் ஏற்படுகிறது. அந்த ஒவ்வொரு கட்டத்திலும் நாமே அந்த மின்னல் மழையை அனுபவிப்பது போன்ற ஒரு பிரமை ஏற்படுகிறது.       அடுத்து என்ன? என்ன? என்று ஒவ்வொரு பக்கத்திலும் சம்பவங்களைத் தீட்டியிருப்பது வாசகர்களைக் கவரும் வகையில் அமைந்துள்ளது.       ...

வாழ்வியல் சிந்தனைகள்.. தொகுதி.14 - கி.வீரமணி

வாழ்வியல் சிந்தனைகள்.. தொகுதி..14 (கி.வீரமணி) ______________________________       ஆசிரியர் அவர்கள், அவ்வப்போது சிந்தனையில் தோன்றும் சிறந்த எண்ணங்களை விடுதலை நாளிதழில் பதிவு செய்வதுண்டு.         அவ்வாறு எழுதப்பட்ட குறிப்புகள் 13 தொகுதிகளாக வெளிவந்து அனைவர் உள்ளங்களையும் கவர்ந்தது.பயனுள்ளதாக இருந்தது.இது 14 வது தொகுதி.இதில் 75 கட்டுரைகள் உள்ளன.       பெரியார் - மணியம்மையார் ஆகியோருடன் அவருக்கு ஏற்பட்ட அனுபவங்கள், அமெரிக்க காங்கிரஸ் அலுவலகத்தில் தாம் வாங்கிய அரிய நூல்கள், நெல்சன் மண்டேலாவின் சிறந்த கடிதங்கள் போன்ற பல தகவல்கள் இதில் அடங்கியுள்ளன.       100 ஆண்டுகள் வாழ்வது குறித்தும், நெஞ்சுவலி நிவாரணத்திற்கான மாத்திரையை எப்போதும் உடன் வைத்திருக்க வேண்டிய அவசியம் குறித்தும் இந்நூலில் விவரித்து தந்து இருக்கிறார் ஆசிரியர்.              (விலை : ரூ 200) (சுயமரியாதை பிரச்சார நிறுவனம்)

கரித்துண்டு - மு.வரதராசனார்

கரித்துண்டு (மு.வரதராசனார்) _______________________________       இந்நூலில் சமுதாய நோக்கு சூழ்ந்தும், அகன்றும் இருத்தலை அறிய முடிகிறது.       வறுமை மனித குலத்தை எத்தகைய கீழ்நிலைக்குத் தள்ளுகிறது என்பதனை மு.வ அவர்கள் பல கோணங்களில் காட்டுகிறார்.       மனிதனாகப் பிறந்த அனைவரும் ஈகையைப் பின்பற்ற வேண்டும் என்கிறார்.        பெண்ணின் பெருமை, இல்லறச் சிறப்பு, ஒற்றுமை உணர்வு, பொருளாதார ஏற்றத்தாழ்வு ஆகியனவற்றை "கரித்துண்டு " புதினத்தில் காணமுடியும்.                 (விலை : ரூ 100)                (பாரி நிலையம்)

ஜெயந்தி வந்தாள் - லட்சுமி

ஜெயந்தி வந்தாள் (லட்சுமி) ______________________________        தாயில்லாதப் பெண்ணான ஜெயந்தி, திருமணமான ஒரு மாதத்திலேயே கணவனால், பிறந்த வீட்டிற்கு அனுப்பப்படுகிறாள்.வயதானத் தந்தை மிகவும் வேதனைப்படுகிறார்.        சிறிது நாட்களுக்குப்பின் ஜெயந்தி வேலை பார்க்கும் ஊருக்கே மாற்றலாகி வருகிறான் கணவன் கதிரேசன். தன் தவறுகளை உணர்கிறான்.உண்மையான அன்பின் தன்மையை உணர்ந்து தன் மனைவியுடன் வாழ நினைக்கிறான். குடும்ப நண்பர் ரத்தினம் உதவி செய்கிறார்.        இந்த மண்ணிற்குரிய தனித்தன்மையை, குறிப்பாக நம் பெண்களின் பாரம்பரியப் பண்பாட்டின் பெருமையை உயர்த்தும் வகையில் எழுதியுள்ளார் லட்சுமி அவர்கள்.             (விலை : ரூ 50)             (பூங்கொடி பதிப்பகம்)

தீவுகள் - பிரபஞ்சன்

தீவுகள் (பிரபஞ்சன்) ______________________________       நம் இப்போதைய கவலை வேறாக உள்ளது.மனிதர்கள் தனித்தனி தீவுகளாகிக் கொண்டிருக்கிறார்கள்.நான் தனி, அவன் தனி என்பது அவர்கள் எண்ணமாக இருக்கிறது.        நாம் மனிதகுலம் என்கிற அமைப்பில் ஓர் அங்கமே என்ற எண்ணம் நமக்கில்லை.நம் இன்பமும் துன்பமும், வாழ்வும் வளமும், முன்னேற்றமும் தாழ்வும் ஒட்டு மொத்த மனிதகுலத்தின் சிறப்புகளின் அடிப்படையில்தான் அமைந்திருக்கிறது என்பதை நாம் அறியவில்லை.        மூடிய நம் அறைக்குள்ளாகவே நம் உலக அடங்கி விட்டது என்று நாம் நினைப்பது, நம் அறியாமை அல்லவா?                 (விலை : ரூ 50)                 (கவிதா பப்ளிகேஷன்)      

மாமிசப்படைப்பு - நாஞ்சில் நாடன்

மாமிசப்படைப்பு (நாஞ்சில் நாடன்) __________________________        இருநூறு குடும்பங்கள் வாழும் மாங்கோணத்தில் 2,3 நிலக்கிழார்களின் ஆதிக்கம்.. அவர்களை அண்டி வாழ்கின்ற பல்வேறு குடும்பங்கள்..       மழை பெய்வதற்கும், பயிர் விளைவதற்கும் ஆதாரமாய் இருப்பவை, சில தெய்வங்கள்தான் என நம்புதல்..அவற்றிற்கு எடுக்கப்படும் விழாக்கள்..அதன் பொருட்டு உருவாகும் வன்மங்கள் ..குரோதங்கள் என்ற ரீதியில் கதை துவங்கி நகர்ந்து முடிகிறது இந்த குறும்புதினம்.        மிராசு கடுவாய் சுந்தரத்திற்கும், நேர்மையான கந்தையாவுக்கும் நடக்கும் அகப்போரில் கந்தையா படைப்புதான் மையக்கோடு.          கதாப்பாத்திரகளின் அறிமுகமும், உரையாடல்களும் மனதைத் தொடும்.வேளாண் தொழிலோடு மக்களின் வாழ்வியலையும் மிக அழகாகப் பின்னியுள்ளார் ஆசிரியர்.               (விலை : ரூ 120)               (விஜயா பதிப்பகம்)

சொல் என்றொரு சொல் - ரமேஷ் - பிரேம்

சொல் என்றொரு சொல் (ரமேஷ் - பிரேம்) _________________________________        பிரமிப்பூட்டும் மொழியும், நடையும் அமையப் பெற்ற புதினம்.        தமிழக வரலாறு குறித்த மீள்பார்வையையும், மறுகூறலையும் முன்வைக்கிறார்கள்.இலங்கை பற்றி வரலாற்றுக் காலந்தொட்டு சமகால வரையில் (2004)எழுதப்பட்டுள்ளது.       அற்புதமான நெஞ்சை நெகிழ வைக்கும், பெரும் மனவெழுச்சியை உருவாக்கும் சித்திரங்களும் இருக்கின்றன.       புராண மரபுகளையும், இதிகாசங்களையும், பழங்கதைகளையும் எடுத்துக் கொண்டு புதுப்புது முறையில் கதை கூறப்பட்டுள்ளது.              (விலை : ரூ 125)              (காவியா பதிப்பகம்)

நான் - உதயணன்

நான் (உதயணன்) _____________________________         சமூகத்தின் அழுக்குகளைத் துடைத்தெறியும் வகையில் சமூகக் கண்ணோட்டத்துடன் எழுதப்பட்ட நூல் இது.         படிப்பவர் ஒவ்வொருவருக்கும் தமது வாழ்க்கையைப் பழுது பார்த்துக் கொள்வதற்கான விழுதுகளைத் தாங்கியுள்ளது.       "நான் " என்னும் வேர்விட்ட விருட்சத்தை வீழ்த்தி நாம் என்னும் ஆலமரத்தைக் கண்டு இளைப்பாறச் செய்யும் ஆன்மபலத்தை விளக்குவதாக உள்ளது.      வாழ்க்கையை வாழும் முறைப்படி வாழ்ந்து காட்டினால் சொர்க்கவாசல் திறந்தே கிடக்கும் என்பதை எடுத்துக்காட்டி அனைவரையும் படிக்கத் தூண்டுகிறது.                   (விலை : ரூ 150)                   (சீதை பதிப்பகம்)

வெற்றிகள் விற்பனைக்கு அல்ல - நா.சங்கரராமன்

வெற்றிகள் விற்பனைக்கு அல்ல (நா.சங்கரராமன்) _______________________________         கருத்துப் பெட்டகமாய் அமையும் தன்னம்பிக்கை நூல்களின் வரிசையில், இயல்பாய் நம்முடன் அமர்ந்து கையைப் பிடித்துக் கொண்டு வெற்றியை நோக்கி நம்மை அழைத்துச் செல்கிறது இந்நூல்.          எடுத்த உடனே.."நிராகரிப்பை நிராகரியுங்கள் " என்ற தலைப்பே சாட்டை அடியாய் நம்மை உறுத்துபவைகளைத் துடைத்தெறிகின்றது.         14 தலைப்புகளில் அருமையாக உண்மைச் சம்பவங்களைக் கூறி மனதைப் பக்குவப்படுத்தி தோழமையோடு வெற்றியின் படிக்கட்டில் அமர வைக்கும் முயற்சியில் ஆசிரியர் வெற்றி பெற்றுள்ளார்.         ஒவ்வொரு ஆசிரியரும், மாணவரும் மட்டுமல்ல..அனைவர் கையிலும் இருக்க வேண்டிய அற்புதமான நூல்..                 (விலை : ரூ 60)                 (விஜயா பதிப்பகம்)

சுகவாசிகள் - கரிச்சான் குஞ்சு

சுகவாசிகள் (கரிச்சான் குஞ்சு) ____________________________         ஆசை, சுயநலம் இரண்டு குணாம்சங்களில் வாழும் மனிதர்களின் கதைகள் கொண்ட குறுநாவல்கள் இவை.       தனிமனித ஆசை எவ்வாறு ஒவ்வொருவரின் வாழ்வை, அவர்களின் தனிப்பட்ட வாழ்வை சீரழிக்கிறது என்பது விரிவாகக் காட்டப்பட்டுள்ளது.        தனக்கென்று ஒன்று கிடைக்கும்போது, ஒவ்வொருவரும் எவ்வாறு தடம் மாறுகிறார்கள் என்பதைக் கூறுகிறது. இன்னொரு குறுநாவல் "ஒரு மாதிரியானக் கூட்டம் ".         சுயநலத்திற்காக அழிதல் என்பதே இரு குறுநாவல்களுக்கும் பொதுவான அம்சம்.               (விலை : ரூ 150)               (காலச்சுவடு பதிப்பகம்)

ராஜதிலகம் - சாண்டில்யன்

ராஜதிலகம் (சாண்டில்யன்) _________________________________        1960 களில் குமுதம் வார இதழில் தொடராக வெளிவந்தது.         பல்லவ மன்னன் ராஜசிம்மனை மையமாக வைத்து, பல்லவர் வரலாற்றை ஒட்டி, கற்பனைகளையும் சேர்த்து எழுதப்பட்ட நூல் இது.        காஞ்சி கைலாசநாதர் கோயில், மாமல்லபுரம் அரங்கன் கோயில் உருவான வரலாற்றை போர் மற்றும்  காதலுடன் இணைத்து எழுதியுள்ளார் ஆசிரியர்.        வீரம், காதல், தியாகம், பெருந்தன்மை போன்றவை சரியான விகிதத்தில் கலந்து தரப்பட்டிருக்கும் மிக அருமையான படைப்பு.                    (வானதி பதிப்பகம்)

எப்போதும் இன்புற்றிருக்க

தினம் ஒரு புத்தகம் _______________________________ எப்போதும் இன்புற்றிருக்க... (வெ.இறையன்பு) ________________________________          ஆசிரியர் தன்னுடைய அனுபவங்களையும், தாம் வாசித்த மனிதர்களின் வாழ்க்கையையும் தொகுத்து நூலாக்கியுள்ளார்.         "நிரந்தரமாகுமா நிம்மதி "முதல் "நுகர்வதும், பகிர்வதும்! " ஈறாக 26 கட்டுரைகள் இந்நூலில் உள்ளன.          மகிழ்ச்சி என்பது, நம்மை நாம் புரிந்து கொள்வதிலும், அடுத்தவர்களுக்கு நிரூபிக்க நினைக்காமல் இயல்பாய் வாழ்வதிலும் அமைந்திருக்கிறது என்பதுதான் அதற்கான முதல்படி.        "எப்போதும் இன்புற்றிருப்பது " என்பதை கைக்கொள்வதற்கு இயல்பாக, எளிமையாக, சாதாரணமாக இருந்தால் போதும் ; அது தானாகவே கைக்கூடும்.        மனிதனின் மகிழ்ச்சி பகிர்தலில் உள்ளது.எல்லோரிடமும் அன்புடனும், பரிவுடனும் பரிமாறிக் கொள்ளும் சிநேகமே மகிழ்ச்சிக்கான வித்து என்பதை உணர வைக்கும் நூல்.. இது வெறும் புத்தகமல்ல; உண்மையான ஓர் இதயம்..!                 ...

நில் கவனி தாக்கு

நில்  கவனி  தாக்கு (சுஜாதா) ________________________________          1970 களில் தொடராக வந்த ஜேம்ஸ்பாண்ட் பாணியில் அமைந்த கதை.இன்றைய சூழலுக்கும் பெரிதும் பொருந்துவது ஆச்சரியம்.         முழுக்க முழுக்க தன்னிலையில் சொல்லப்படும் இப்புதினம், டெல்லியில் ஒரு அணு விஞ்ஞானி கடத்தப்படும் சம்பவத்தில் தொடங்கி, அடிதடி, ரத்தம், சத்தம், சாகசம் என்று பரபரப்பாகி, எதிர்பாராத ஆச்சரியத்தில் முடிகிறது.        கதை முழுவதும் இரண்டு நாட்களில் நடக்கிறது. விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லை.சிட்டாய் பறக்கின்றன பக்கங்கள்.ஒரு மணி நேரத்தில் வாசித்து முடித்து விடலாம்.           புதினத்தின் வேகமும், துள்ளல் எழுத்தும் 50 ஆண்டுகளாகியும், இப்போதும் படிப்பவரை தன்வசம் ஈக்கும்.                  (விலை : ரூ 75)                  (கிழக்கு பதிப்பகம்)

காற்றோடு ஒரு யுத்தம்

காற்றோடு ஒரு யுத்தம் (இந்திரா சௌந்திரராஜன்) _________________________________        தொன்மம் சார்ந்த புதினம்.இதில் கருப்பசாமி வேண்டுதலுக்கு ஒரு வீட்டினை ஒப்படைத்து விட்டு, ஒரு குடும்பம் நகரத்தில் குடியேறுகிறது.         மகளின் திருமணத் தேவைக்காக மீண்டும் ஊருக்கு வந்து அந்த வீட்டினை விற்க முற்படும் போது அமானுஷ்ய சம்பவங்கள் நடைபெறுகின்றன.         இறுதியில் அவ்வீட்டினை அவ்வூர் மணியக்காரர் கடத்தல் பொருள்கள் பதுக்கி வைக்க உபயோகப்படுத்துவதை அறிந்து கொள்கின்றனர்.       கடத்தல் கும்பலிடம் மாட்டிக் கொண்டவர்களை குதிரையில் வருகிறவர் காப்பாற்றுகிறார். அவர்தான் கருப்பசாமி என்று நம்புகின்றனர்.                   (விலை : ரூ 100)                   (திருமகள் நிலையம்)

கங்கையும் வந்தாள்

தினம் ஒரு புத்தகம் _____________________________ கங்கையும் வந்தாள் (லட்சுமி) _____________________________        இந்தப் புதினத்தின் நாயகி "கங்கா "பொறுமையில் பூமியையும்,  சகிப்புத்தன்மையில் கங்கையையும் ஒத்தே விளங்குகிறாள்.          பம்பாயிலிருந்து, "நரேந்திரன் "  நம்பி வந்த ரத்னசாமி வைரப் பிள்ளையார் விசயத்தில் ஏமாற்றினாலும், அவர் மகள் கங்காவின் அன்பை அடைய காரணமாகிறார்.       கங்காவை மணந்து கொண்டு, தான் ஏமாற்றப்பட்ட ஆத்திரத்தில் அவளை பழி வாங்குகிறான்.அவள் அவனை விட்டு விலகிச் செல்கிறாள். என்றாலும், தன் கணவன் தலையில் அடிபட்டுக்கிடக்கிறான் என்பதை அறிந்து, அவன் நலம் பெற துணையாய் இருக்கிறாள்.மீண்டும் பிரிய நினைக்கிறாள்.        தனக்கு ஆதரவு தந்த சிவகாமி அம்மாவின் சொல் கேட்டு, நரேந்திரனை மன்னித்து அவனுடன் வாழ்க்கையைத் தொடர்கிறாள்.இப்புதினத்தில் இவர்கள் இருவருடன் ஏனைய பாத்திரங்கள் அனைவருமே என்றென்றும் நம் நெஞ்சில் நிழலாடக் கூடியவர்கள்.                (விலை : ரூ 160) ...