Posts

Showing posts from June, 2022

ஒரு சிறு இசை (வண்ணதாசன்)

 ஒரு சிறு இசை (வண்ணதாசன்) ____________        இந்நூலில் 15 சிறுகதைகள் உள்ளன.ஆசிரியரின் 12 வது சிறுகதைத் தொகுப்பு.       அவருக்கே உரித்தான கவிதை அழகியல், தத்துவ உரையாடல்களைக் கொண்ட இத்தொகுதியில் மனிதர்களின் அன்பும் உறவும் அதிகமாகப் பேசப்படுகிறது.         முதுமையின் வாழ்வைச் சித்தரிக்கும் கதைகள் பலவும் இத்தொகுதியில் உள்ளன.        ஒவ்வொரு சிறுகதையிலும் ஒரு சிறு இசை ஒலிப்பதை வாசிப்பவர் கேட்க முடியும்.        சாகித்ய அகாடமி பரிசு பெற்ற நூல் இது.                 (விலை : ரூ 160)                 (சந்தியா பதிப்பகம்)

வேள்வித் தீ(எம்.வி.வெங்கட்ராம்)

_____________________________ வேள்வித் தீ (எம்.வி.வெங்கட்ராம்) _____________________________          ஒரு நெசவாளியின் கஷ்ட ஜீவனத்தை ஆழ அகலங்களுடன் சொல்லும் புதினமாக மட்டும் இது நின்றிருந்தில், காலவோட்டத்தில் காணாமல் போன புதினங்களில் ஒன்றாகக் கரைந்து போயிருக்கும்.         அப்படியின்றி புற வாழ்வின் சவால்களுக்கு நடுவிலும் மூன்று கதாப்பாத்திரங்களுக்கும் இடையிலுமான மனப்போராட்டத்தை நுட்பமாகவும், நேர்த்தியாகவும் குறிப்பாக எதார்த்தமாகவும் கொண்டிருப்பதன் காரணமாக இன்றும் இப்புதினம் பொருட்படுத்தத்தக்கதாக அமைந்துள்ளது.                   (விலை : ரூ 125)                   (காலச்சுவடு பதிப்பகம்)

பணம் - பெண் - பாசம்(ஜாவர் சீதாராமன்)

______________________________ பணம் - பெண் - பாசம் (ஜாவர் சீதாராமன்) _______________________________        வாழ்வில் தயவு தாட்சண்யத்திற்கு இடமில்லை என்ற எண்ணத்துடன், செல்வம் மேல் செல்வம் குவிக்கும், தன் மகள் மேல் உயிரையே வைத்திருக்கும் தொழிலதிபர் "சக்ரபாணி ".         இளமையில், போலீசுக்கு பயந்து ரயிலில் விழவிருந்த சக்ரபாணிக்கு தன் நிலத்தை விற்று தொழில் தொடங்க பணம் கொடுத்து உதவினார் "லால்குடி சீனிவாசன் ". அவருக்குத் துன்பம் வரும்போது காப்பாற்ற மறுத்துவிட்டான் சக்ரபாணி. அவன் மகனுக்கும் உதவவில்லை.        இதையெல்லாம் தன் தாய்வழி தாத்தா மூலம் அறிந்த "பாலா"  (சக்ரபாணியின் மகள்)  குருமூர்த்தியின் குடும்பத்திற்கு, தான் யார் என்று சொல்லாமலே, அவர்கள் வீட்டிற்குச் சென்று சேவகம் செய்கிறாள்.சீனிவாசன் மகள் திருமணத்திற்கு தன் தந்தைமூலம் பண உதவி செய்கிறாள்.அக்குடும்பமே வாழ்த்துகிறது. பாலா அத்தை மகன் மோகனை மணக்கிறாள்.சக்ரபாணி உலகில் பணத்தைவிட சிறப்பானது "அன்பு " தான் என்பதை உணர்கிறான்.       488 பக்கங்கள் உள்ள புத்தகம்.ப...

முருகன் அல்லது அழகு(திரு.வி.கல்யாணசுந்தரனார்)

________________________________ முருகன் அல்லது அழகு (திரு.வி.கல்யாணசுந்தரனார்)  ________________________________        திரு.வி.க மொழிமேடையில் வீசிய தென்றல்.. எழுத்துலகில் ஓர் இமயம்.. தொழிலாளர்கள் உலகில் அவர் ஒரு தொழிலாளி..        "முருகன் அல்லது அழகு " என்னும் இந்நூல்.. முருக வழிபாட்டில் கிளர்ச்சியையும் எழுச்சியையும் செய்த பெரு நூல். முருகு என்னும் சொல் மணம், இளமை. அழகு, கடவுள் தன்மை என முதன்முதலாக விளக்கப் பெறுகிறது. இயற்கையின் எழில் இறைவடிவாகக் காட்டப்பட்டுள்ளது.        தமிழர் கடவுட் கொள்கையை, வழிபாட்டு நெறியை, நன்மையை, தூய்மையை அழகோவியமாக்கியுள்ளார் திரு.வி.க அவர்கள்.  "முத்தமிழால் வைதாரையும் அங்கு வாழவைப்போன் " என்னும் திருவாக்கால் தமிழுக்கும் முருகனுக்கும் உள்ள இயைபு விளங்கும்.               (விலை : ரூ 30)               (மணிவாசகர் பதிப்பகம்)

வைரமுத்து சிறுகதைகள்

_________________________ வைரமுத்து சிறுகதைகள் _________________________     ஒரே பத்திரிகையில் ஒரே ஆசிரியர் 40 வாரங்கள் தொடர்ந்து சிறுகதைகள் எழுதியது இதுவே முதல்முறை!       வெளிவந்து கொண்டிருக்கும் போதே இதில் சில கதைகள்,  தன்னாட்சிக் கல்லூரிகளில் பாடங்களாக இடம் பெற்றிருக்கின்றன!      கவிஞரினின் முதல் சிறுகதைத் தொகுப்பு!      இதில் பல பிரச்சனைகளும், கௌரவக் கொலைகள் என்று தப்பாக உச்சரிக்கப்படும் காதல் கொலைகள் முதல் இலங்கைப் படுகொலை வரை பேசப் படுகிறது!        சாதாரணச் சொற்கள், எதார்த்தமான விவரிப்பு, போகிற போக்கில் நினைத்துப் பார்க்க முடியாத காட்சிப்படுத்துதல், புது சொல்லாக்கம், படிப்போரின் மனதை கைப்பிடித்து அழைத்துச்செல்லும் திறன்,கதையின் முடிவில் நீக்க முடியாத கறையைப்போல படியும் சோகம் ..என்றாலும், அழகான மகிழம்பூ கோர்த்தது போல் இணைக்கிறார் கவிப்பேரரசு! காலத்தை வெல்லும் காவியம் இந்நூல்! 📚              (விலை : ரூ 300)              (திருமகள் பதி...

சுகவாசிகள்(கரிச்சான் குஞ்சு)

___________________________ சுகவாசிகள் (கரிச்சான் குஞ்சு) ____________________________         ஆசை, சுயநலம் இரண்டு குணாம்சங்களில் வாழும் மனிதர்களின் கதைகள் கொண்ட குறுநாவல்கள் இவை.       தனிமனித ஆசை எவ்வாறு ஒவ்வொருவரின் வாழ்வை, அவர்களின் தனிப்பட்ட வாழ்வை சீரழிக்கிறது என்பது விரிவாகக் காட்டப்பட்டுள்ளது.        தனக்கென்று ஒன்று கிடைக்கும்போது, ஒவ்வொருவரும் எவ்வாறு தடம் மாறுகிறார்கள் என்பதைக் கூறுகிறது. இன்னொரு குறுநாவல் "ஒரு மாதிரியானக் கூட்டம் ".         சுயநலத்திற்காக அழிதல் என்பதே இரு குறுநாவல்களுக்கும் பொதுவான அம்சம்.               (விலை : ரூ 150)               (காலச்சுவடு பதிப்பகம்)

உள்ளம் கவர் கள்வன் (பாலகுமாரன்)

_________________________________ உள்ளம் கவர் கள்வன்  (பாலகுமாரன்) _________________________________          தமிழின் ஆகச்சிறந்த எழுத்தாளரும், தமிழ் இலக்கிய உலகில் "எழுத்து சித்தர் " என்று அழைக்கப்படுபவருமாகிய பாலகுமாரன் அவர்களின்  "உள்ளம் கவர் கள்ளன் " வாசிக்கும் அனைவரையும் கவர்வான்.          வளம்மிக்க குடும்பத்து நந்தினி, சாதாரண நிலையில் இருக்கும் சம்பத்தை விரும்புகிறாள். வீட்டில் தெரிந்து எதிர்கின்றனர். பையன் வீட்டில் அப்பா ஆதரவு கொடுக்கிறார். நண்பன் ரமேஷ் உதவுகிறான்.           காதல் திருமணம்.. சமுதாயத்தை எதிர்கொள்ளல் .. பெற்றோரின் துயரம் .. போன்ற பல்வேறு இடர்பாடுகளை சொல்லும் புத்தகம் இது.                 (விலை : ரூ 60)                 (விசா பப்ளிகேஷன்ஸ்)

வெற்றிகள் விற்பனைக்கு அல்ல(நா.சங்கரராமன்)

______________________________ வெற்றிகள் விற்பனைக்கு அல்ல (நா.சங்கரராமன்) _______________________________         கருத்துப் பெட்டகமாய் அமையும் தன்னம்பிக்கை நூல்களின் வரிசையில், இயல்பாய் நம்முடன் அமர்ந்து கையைப் பிடித்துக் கொண்டு வெற்றியை நோக்கி நம்மை அழைத்துச் செல்கிறது இந்நூல்.          எடுத்த உடனே.."நிராகரிப்பை நிராகரியுங்கள் " என்ற தலைப்பே சாட்டை அடியாய் நம்மை உறுத்துபவைகளைத் துடைத்தெறிகின்றது.         14 தலைப்புகளில் அருமையாக உண்மைச் சம்பவங்களைக் கூறி மனதைப் பக்குவப்படுத்தி தோழமையோடு வெற்றியின் படிக்கட்டில் அமர வைக்கும் முயற்சியில் ஆசிரியர் வெற்றி பெற்றுள்ளார்.         ஒவ்வொரு ஆசிரியரும், மாணவரும் மட்டுமல்ல..அனைவர் கையிலும் இருக்க வேண்டிய அற்புதமான நூல்..                 (விலை : ரூ 60)                 (விஜயா பதிப்பகம்)

அடிமையின் காதல்(ரா.கி.ரங்கராஜன்)

_________________________________ அடிமையின் காதல் (ரா.கி.ரங்கராஜன்) __________________________________         வெள்ளைக்காரன் சென்னையில் குடியேறிய காலம் மிகவும் சுவாரசியமானது. அதற்கான தகவல்களை கன்னிமாரா நூல்நிலையத்தில் இக்கதைக்கு தகவல்களை திரட்டியுள்ளார் ஆசிரியர்..         கதைநாயகன் பெயர் "காஞ்சிபுரத்தான் " .இவர் வீட்டில் கோபித்துக் கொண்டு புறப்படும் வேளை தொட்டு, இந்திய ஆங்கிலேய உறவை.. கதையின் நடு அத்தியாயத்தில் வைத்து , காஞ்சிபுரத்தான் கதையைக் கொண்டு போய் கோட்டை வாசலில் முடித்திருப்பார் ரா.கி.ர அவர்கள்.        "மதராஸ் இப்படியும் இருந்ததா? " என வியக்க வைக்கும் நுண்ணிய பல சரித்திர தகவல்கள் ..          சாந்தோம் சர்ச் பக்கம் செல்லும் போதெல்லாம் தன் தோளில் வளர்ப்பு ஓணானுடன் மாலை வாக்கிங் செல்லும் ஆங்கிலப் பாதிரியார் நினைவுக்கு வருவார்.. ஒரு தலைமுறையை வியக்க வைக்கும் கதை "அடிமையின் காதல் "..         (விலை : ரூ 205)         (வி.கே.புக்ஸ் இன்டர்நேஷனல்)

நெருங்சி முள்(சிவசங்கரி)

________________________________ நெருங்சி முள் (சிவசங்கரி) ________________________________          இக்கதை கற்பனையல்ல.. எதார்த்தம்.. இதில் வரும்  "சாந்தி சதன் " கற்பனையல்ல.. சத்தியம்.. அதன் தலைவி பூமா அன்னை தெரசாவிற்கு ஒப்பானவள்.           பூமா வாசகர்களுக்கு, ஒரு குழந்தையாக, ஒரு காந்தியவாதியின் செல்லமகளாக நமக்கு அறிமுகம் ஆகிறாள்.         தந்தையோடு சேர்ந்து சேவையில் வளர்ந்து, தாய்க்கு உறுதுணையாய் இருக்கிறாள். பின்னர் மனதால் துறவியாகி, பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியோர்களின் மறுவாழ்விற்குத் தன்னை அர்பணிக்கிறாள்.           இந்நூலை படிப்பதன்மூலம், முதியவர்களும், அவர்களுடைய வாழையடி வாழைகளும் சிந்தித்து, தங்களைத் திருத்திக் கொண்டால் நமது சமுதாயம் உருப்படும்.                 (விலை : ரூ 65)              (கங்கை புத்தக நிலையம்)

ஒரு காவிரியைப் போல(லட்சுமி)

_________________________ ஒரு காவிரியைப் போல (லட்சுமி) _________________________        பிறந்த தொட்டியம், வளர்ந்த முசிறி, படித்த திருச்சி ஆகியவற்றில் ஓடும் காவிரி ஆற்றினை தன் நாவலின் கதாநாயகி பெயராக வைத்து இந்த நாவலை எழுதியுள்ளார் ஆசிரியர்!      இவர் தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்தவர் என்பதால் அங்கேயே சில தலைமுறைகளாக வாழ்ந்து வரும் தமிழ்க் குடும்பங்களைக் கதாப்பாத்திரங்களாக வைத்து,   இப்புதினத்தை எழுதியுள்ளார்!     கூட்டுக்குடும்பத்தின் சிறப்பு, சகோதர பாசம், தொழில் பக்தி, பிறருக்கு உதவி செய்தல் போன்ற செய்திகள் ஆற்றொழுக்கு நடையில் கூறி இருப்பது படிப்பவரின் மனதைக் கவரும்!     சாகித்ய அகாடமி பரிசு பெற்ற நூல்! 📚              (விலை : ரூ 190)              (பூங்கொடி பதிப்பகம்)

மணல்வீடு(அநுத்தமா)

_________________________________ மணல்வீடு (அநுத்தமா) _________________________________           இன்றைய சமூகத்தில் இளம் விதவைகளின் நிலை "மணல்வீடு " போன்றதாக உள்ளது. (இக்கதை 1952 ல் எழுதப்பட்டது) எனினும், நிகழ்காலத்திற்கும் பொருத்தமாக இருப்பதே இந்நூலின் சிறப்பு.          அன்பெனும் நீர் சுரக்காவிடில் இக்கதை நாயகி விநோதா போல் நிறைய விநோதாக்கள் தோன்றத்தான் செய்வார்கள்.          இன்று அந்நிலை மாறினாலும்,  பல நூறு ஆண்டுகளாக உடம்பில் ஊறிவிட்ட மரபால் அவர்களை அன்போடும், ஆதரவுடன் அழைக்காமல் இவ்வுலகம் குறுகிய மனப்பான்மையுடன் சந்தேகக் கண்ணுடன் நோக்குகிறது.        கதை நாயகி "விநோதா " தைரியமாக, தன் கொள்கையில் நின்று, சத்தியத்திற்கு மட்டும் கட்டுப்பட்டு வெற்றி கண்டது போல, ஒவ்வொரு பெண்ணும் நிமிர்ந்து நிற்க வேண்டும் என்பதே எல்லோருடைய கனவாக இருக்கும்..                   (விலை : ரூ 120)                   (விபோ புக்ஸ்)...

நிலம் பூத்து மலர்ந்த நாள்(மனோஜ் குரூர்)தமிழிர்...கே.வி.ஜெயஸ்ரீ

__________________________________ நிலம் பூத்து மலர்ந்த நாள் (மனோஜ் குரூர்) தமிழிர்...கே.வி.ஜெயஸ்ரீ _____________________________________          தலைப்பு மிகவும் வசீகரமானது. கதை நடக்கும் காலம் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. கடந்த காலத்தை ஊடறுத்து, அக்கால வாழ்வியலை உற்று நோக்குவது போல் உள்ளது.         வறுமை களைய மன்னரைப் பாடி பரிசு பெற்று மகிழும் மக்களைப்பற்றி அகலப் பேசும் நூல் இது.           பாணரையும், கூத்தரையும் கதை மாந்தர்களாகக் கொண்டு, களவொழுக்கம், கற்பொழுக்கம், பகல் குறி, இரவுக்குறி, உடன்போக்கு எனும் சம்பவங்களைக் கொண்டது.            கொலும்பன், சித்திரை, மயிலன் என்னும் பிரதான கதாப்பாத்திரங்கள் மூலம் வேடர், உழவர், பரதவர் என்போரின் வாழ்க்கை நெறிகளையும், அவர்களின் பண்பாட்டுக் கூறுகளையும் பேசுகிறது இந்நூல்.         பெரும் கதைமாந்தர்களாக கபிலர், பாணர், ஔவை நடமாடுவது...குறுநில மன்னர்கள் நன்னன், பாரி, அதியமான், மூவேந்தர்கள் களமாடுவது .. விறுவிறுப்பான மர்ம முடிச்சுகள்...

ஒரு மனிதனின் கதை (சிவசங்கரி)

 ஒரு மனிதனின் கதை (சிவசங்கரி) ___________       விகடனில் தொடர்கதையாக வெளிவந்த கதை..குடிகாரர்களைப் பார்த்து, புரிந்து கொண்டதை .. உணர்ந்து கொண்டதை.. ஆசிரியர் இப்புத்தகத்தில் பகிர்ந்துள்ளார்.          "த்யாகு " குடிப்பழக்கத்திற்கு ஆளாகிறான்.அணுசரனை இல்லாத மனைவி (கங்கா). அன்பு காட்டாத அப்பா (சாமிநாதன்)..தாய், தங்கை மறைவு ..இதெல்லாம் அவனை பாதிக்கிறது. நண்பனின் உதவியால் சிகிச்சை பெறுகிறான். மீண்டும் குடிக்க ஆரம்பிக்கிறான்.          வேலை, குடும்பம், மரியாதை எல்லாவற்றையும் இழந்து, தற்கொலை செய்து கொள்ளப் போகும்போது, Alcoholics Aninymous அமைப்பைச் சேர்ந்த சிலரால் காப்பாற்றப்படுகிறான்.மீண்டும் வாழ்க்கையைத் தொடங்குகிறான்.            குடியின் அபாயத்தை ஒரு தலைமுறைக்கு விவரமாகச் சொன்ன புத்தகம். ரகுவரன் நடித்து தொலைக்காட்சி தொடராக வெளிவந்தது.              (விலை : ரூ 85)  2008 ல்..              (கங்கை புத்தக நிலையம்)   

வீரயுக நாயகன் வேள்பாரி (சு.வெங்கடேசன்)

 வீரயுக நாயகன் வேள்பாரி (சு.வெங்கடேசன்) ___________         தன்னலமற்ற கொடை உள்ளத்தாலும், அன்பு வழிப்பட்ட வாழ்வியல் மரபாலும் பாரியின் புகழ் தமிழ்நிலம் முழுவதும் பரவியது.         மூவேந்தர்கள் அவன் புகழ் கண்டு வெதும்பினர்.பறம்பின் நீர் வளம் அவர்கள் கண்களை உறுத்தியது.         பாரிக்கு எதிராக அவர்கள் தனித்தனியாக மேற்கொண்ட போர் முயற்சிகள் கைகூடவில்லை. அவர்கள் ஒன்றிணைந்து பாரியின் பறம்புமலையை, பல்வேறு பகுதிகளிலிருந்து தாக்கினர். என்றாலும் குறுநிலமன்னன் பாரியின் படைகள் மூவேந்தர் படைகளைச் சிதறடித்தது.     மூவேந்தரும் ஒன்றாய் சதி செய்து பாரியின் உயிரைப் பறித்தனர். வீரத்தால் சாதிக்க முடியாததை துரோகத்தால் சாதித்தனர்.       இயற்கைக்கும், மனிதனின் பேராசைக்கும் இடையில் நடக்கும் போராட்டத்தின் ஆதிவடிவம் வேள்பாரியின் கதை.      கதையை வாசிக்கும் போது திரும்பும் திசையெல்லாம் அருவி கொட்டும் குறிஞ்சி நிலத்தில்... அந்த அருவி நீரினும் குழுமை உடைய பாரியின் கரம் பற்றி நாமும் நடப்பதாக உணர்வோம்..     ...

கொட்டு மேளம்(தி.ஜானகிராமன்)

_________________________________ கொட்டு மேளம் (தி.ஜானகிராமன்) __________________________________        கொட்டு மேளம், சண்பகப் பூ, பசி ஆறிற்று, தவம், சிலிர்ப்பு, இக்கரை பச்சை உள்பட 12 சிறுகதைகள் கொண்ட நூல் இது.          தி.ஜா வின் அநாயாசமாய்த் துள்ளியோடும் நடை அனைவரையும் கவரும். கொட்டி மேளத்துடன் தொடங்கும் இக்கதைக்கோவை, சொர்ணாம்பாளுக்காகத் தவங்கிடக்கும் மனித இதயத்தின் தடைபடாத உணர்ச்சி சூழலில் நம்மை ஆழ்த்தும்.       வாசிப்பவர் அனைவரும் "செண்பகப் பூ " வை மனக் கண்ணிலிருந்து அகற்ற வழி தெரியாது திண்டாடுவர்.        பார்வதியின் கணவன் டாக்டர் அத்து, எம்டன் பயல் இவர்களெல்லாம் நாம் ஏற்கனவே சந்தித்தவர்களாகவே இருக்கின்றனர்.  மனிதனின் வீழ்ச்சியையும், பிறழ்வையும், தத்தளிப்பையும் அனுதாபத்துடன் பார்த்து வரையப்பட்ட ஓவியம் "கொட்டு மேளம் "...                 (விலை : ரூ 150)                 (காலச்சுவடு பதிப்பகம்)

ரேகா(ராஜம் கிருஷ்ணன்)

___________________________________ ரேகா (ராஜம் கிருஷ்ணன்) ____________________________________            வாலிப பருவத்தின் எதிர்ப்பு உணர்ச்சியைப் பெரிதாக நினைத்து பொறுப்பை நழுவவிட்ட ஆண்மகனையும் ...       பழமை மரபுகளிலேயே ஊறிப் போய் புரட்சிகரமான உண்மையை உண்மையென்றே ஏற்க முடியாமல் ஒரு பொய்யைக் கற்பித்துக் கொண்டு வாழ முயலும் பெண் மக்களையும்....          எதிலும் பாதிக்கப்படாமல் வாழ்வை ஓட்டிப் போகும் குடும்பத்தினரையும், புதுயுகம் காண மெல்லக் கண் விழிக்கும் இளம் பெண்ணையும் இக்கதையில் உலவவிட்டுள்ளதாகக் கூறும் ஆசிரியரின் மொழியே இந்நூலுக்கு தக்க அறிமுகமாகும்...               (விலை : ரூ 85)               (பாலாஜி பதிப்பகம்)

கையில் இருக்கும் பூமி(இயற்கை சார்ந்த கட்டுரைகள்)(தியடோர் பாஸ்கரன்)

________________________________ கையில் இருக்கும் பூமி (இயற்கை சார்ந்த கட்டுரைகள்) (தியடோர் பாஸ்கரன்) _______________________________         உயிரினங்கள் - உறைவிடங்கள் - சுற்றுச்சூழல் கருத்தாக்கங்கள் - சூழலியல் பங்களிப்பாளர்கள் - வளர்ப்பு பிராணிகள் ..சார்ந்து ஆசிரியர் இதுவரை எழுதியுள்ள அனைத்துக் கட்டுரைகளின் முழுத்தொகுப்பே இந்நூல்.        சூழலியல் குறித்து தமிழில் அரிய படங்களுடன் எழுதப்பட்ட ஒரு மிகச்சிறந்த நூலாகும். சூழலியல் ஆர்வலர்களுக்கு ஓர் அரிய நூல்.        நாம் வாழும் பூமி மீது அக்கறை கொண்ட ஒவ்வொருவரின் கையிலும் இருக்க வேண்டிய நூல்.                   (விலை : ரூ700)                   (உயிர்மை பதிப்பகம்)

அஷ்டாவக்ரன்(எண்டமூரி வீரேந்திரநாத்)தமிழில்..கௌரி கிருபானந்தன்

___________________________________ அஷ்டாவக்ரன் (எண்டமூரி வீரேந்திரநாத்) தமிழில்..கௌரி கிருபானந்தன்  ___________________________________         "அஷ்டாவக்ரன் " புராண காலத்தில் வாழ்ந்த ஒரு மகான். அவரது உடலில் அஷ்ட (எட்டு) வக்கிரங்கள் (கோணல்கள்) இருந்ததால் இப்பெயர்.. இவர் மகா புத்திமான்.தசரத சக்கரவர்த்தியின் சபையில் தன் வாதத் திறமையால் பலரை வென்றவர்.           புராணகால அஷ்டாவக்கிரனை கலியுக கதாப்பாத்திரமாக வடித்து, தீய சக்திபோல் உருவாக்கி, கடைசியில் அதே கதாப்பாத்திரத்தின் பிறப்பு .. தீய சக்திகளை அழிப்பது போல் எழுதியிருப்பது தான் தனிச்சிறப்பு..          புத்தகத்தின் பக்கங்களைவிட .. நம் மனவோட்டமும், ரத்தவோட்டமும் வேகமாகச் செல்கிறது. ஆசிரியர் ஒவ்வொரு புதினத்திலும் ஒவ்வொரு விசயத்தை சமூகத்திற்குச் சொல்லுவார். இப்புதினத்தில் " ஜெனிடிக் சயின்ஸ் " பற்றி கூறியுள்ளார். எண்டமூரியின்  படைப்புகளில் மற்றொரு அதிசயம்...                      (விலை : ரூ160)     ...

தொலைந்து போனவர்கள்(சா.கந்தசாமி)

______________________________ தொலைந்து போனவர்கள் (சா.கந்தசாமி) _______________________________        பள்ளி செல்லும் வயதில் நண்பர்களிடம் பலவகையான வித்தியாசங்கள் இருந்தாலும், எப்படியோ ஓர் ஒருமையையும் உணர முடிந்தது.        வயது கூடக்கூட இந்த ஒருமை மாறி வேற்றுமைகளே பெரிதாகிப் போய்விடுகின்றன.நாளாக நாளாக பல்வேறு ஏற்றத்தாழ்வுகள் பழகிய நண்பர்களை பிரித்து விடுகிறது. வெகு எளிமையானது போன்றதொரு கதையை வெகு எளிமையாகச் சொல்கிறார்.        தொலைந்து போனவர்கள் இன்றைய சமூகம் மற்றும் தனி மனிதனின் இறுக்கத்தைத் தூக்கிவாரிப் போடும்படி கண்முன் நிறுத்துகிறது.        ஒரு தலைச்சிறந்த புதினம் என்பதோடு மட்டுமல்லாமல் இன்றைய எதார்த்த உலகைத் துல்லியமாக உணர்த்தும் ஒளி இந்நூல்..📕                   (விலை : ரூ 150)                    (நற்றிணை பதிப்பகம்)

வீணா ஒரு வீணை(லட்சுமி)

____________________________________ வீணா ஒரு வீணை (லட்சுமி) ____________________________________            இப்புதினம் "நல்லதோர் வீணை " என்ற பெயரில் ராணி வார இதழில் தொடர்கதையாக வெளிவந்து வாசகர்களின் பாராட்டைப் பெற்றது.          இரண்டாவது தாரமாக வாழ்க்கைப்பட்டு வீணா படும் அவலங்களையும், கோபத்தில் முதல் தாரத்தின் மகள் நிர்மலா வீட்டைவிட்டு வெளியேறிச் சென்று படும் துன்பங்களைப் பற்றியும் அவருக்கே உரிய பாணியில் சொல்லியிருக்கிறார்.          நாட்டில் சில பெரிய இடங்களில் நடைபெறும் உண்மைச் சம்பவங்களை நமக்கு புரிய வைத்திருக்கிறார் ஆசிரியர்..                 (விலை : ரூ 70)                 (திருமகள் நிலையம்)

பிரேம கீதம்(அநுத்தமா)

__________________________________ பிரேம கீதம் (அநுத்தமா) __________________________________           அன்பின் அருளினால்தான் இவ்வுலகமே இயங்குகிறது. அன்பே உருவான சில பிறவிகள் சில குடும்பங்களில் வாழ்வதால் பல்வேறு ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும் புகழ் மங்காமல் அக்குடும்பங்கள் திகழ்கின்றன.        அத்தகைய பிறவி குடும்பத்தின் மூத்த மருமகள் "விசாலாட்சி ".. அவளால்தான் அக்குடும்பம் சிறப்புறுகிறது. அன்பை அறிந்து கொள்ள முடியாமல் தவிக்கும் இரண்டாவது மருமகள் "அபிதா "..அன்பே சுரக்காத மூன்றாவது தம்பதி "பாலுவும், மீனுவும்".. வக்கிரப் புத்திக்காரனான நான்காவது மகன் "முரளி "யை கலாவின் அன்பு மாற்றுகிறது. ஐந்தாவது மகன் தாய் இருந்தும் தாயன்பு கிட்டமால் தவிப்பவன்.             எல்லோரையும் அன்பால் ஒன்றுபடுத்தி வேற்றுமைகளை புறந்தள்ளி ஒற்றுமையுடன் வாழ வழி சொல்லும் விசாலாட்சி பாத்திரப்படைப்பு அற்புதம்..                (விலை : ரூ 160)                (அல்லயன்ஸ் கம்பென...

அலெக்சாண்டர் கிரஹாம்பெல்(இலந்தை.சு.ராமசாமி)

_______________________________ அலெக்சாண்டர் கிரஹாம்பெல் (இலந்தை.சு.ராமசாமி) ________________________________         தொலைபேசியை கண்டுபிடித்தவர்..ஹார்மானிக் டெலிகிராஃபியைக் கண்டுபிடித்தவர்..விமானத்தைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டவர்..        காது கேளாதவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர்.. ஒரு வட்டத்துக்குள் சிக்காத மாமேதை..       தன் வாழ்நாளில் பகுதி நேர கண்டுபிடிப்பாளராக இருந்தவர்.பகுதி நேர கண்டுபிடிப்பே இவ்வளவு பிரமாண்டம் எனில் மனிதர் எப்படி இயங்கி இருக்கிறார் என்று யோசிக்க முடியும்.       இந்தச் சாதனையாளரின் வாழ்க்கை உங்களை சிலிர்த்துக் கொண்டு மேல் எழச்செய்யும்.                (விலை : ரூ 170)                (கிழக்கு பதிப்பகம்)

தலைகீழ் விகிதங்கள்(நாஞ்சில் நாடன்)

______________________________ தலைகீழ் விகிதங்கள் (நாஞ்சில் நாடன்) _______________________________         ஒரு இளைஞனின் வாழ்க்கையை மகிழ்ச்சி, வறுமை, கோபம், துக்கம், அகங்காரம் என எத்தனை மனித உணர்ச்சிகள் உண்டோ அத்தனையையும் உள்ளது உள்ளபடி பேசுகிறது இந்நூல்.         வசதியானவன் வீட்டில் பெண்ணெடுத்தவன் படும்பாடும், சுயமரியாதைக்காக அவன் படும்பாடும் ..என ஒரு முழு வாழ்க்கையை கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறார் ஆசிரியர்.       மனித மனதின் வக்கிரங்களையும், எதிர்பார்ப்புகளையும், பிறர்படும் கஷ்டங்களைப் பார்த்து மற்றவர்கள் கொள்ளும் சந்தோசங்களையும் சாதாரண பார்வையாளராகப் பார்த்து நமக்குச் சொல்கிறார்.         கதை படிக்கும் நமக்கு பகீர் என்கிறது.  ஏனெனில் அந்தக் கதையில் வருபவர்கள் நம்மைப் போன்றவர்களே அன்றி வேறுயாருமல்லர். வாசிக்காதவர்கள் உடனே வாசியுங்கள். ஒரு அழகான வாசிப்பனுபவத்தை பெறுவீர்கள்.              (விலை : ரூ 170)               (விஜயா பதிப்பகம்)...