Posts

Showing posts from August, 2020

வெற்றி வெளியே இல்லை - த.இராமலிங்கம்

தினம் ஒரு புத்தகம் ______________________________ வெற்றி வெளியே இல்லை (த.இராமலிங்கம்) ______________________________          இன்றைய வளரும் தலைமுறையினரின் மனதில் பதிய வைக்க வரும் ஒழுக்கக் கையேடாக உருவெடுத்துள்ள நூல் இது.         நம்முடைய ஒழுக்கச் சிந்தனைகளைப் பட்டியலிட்டு, அதற்கான சூழ்நிலைகள், தீர்வுகள் என மனித சமூகம் மறைமுகமாகவும், வெளிப்படையாகவும் எதிர்கொள்ளும் அனுபவங்களின் அரிய தொகுப்பு இந்நூல்.        "இருட்டை விரட்டும் வெளிச்சம் " "உழைக்காமல் வருமா உயர்வு " "திட்டமிட்டால் வெற்றி உறுதி "  "நிற்க அதற்குத் தக " என  அத்தியாயங்கள் தோறும் ஒழுக்க நடைமுறைகளை வரிசைப்படுத்தி வாழ்வில் வெற்றி பெறுவதற்கான ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை சுவாரஸ்யமாகக் கூறியுள்ளார் ஆசிரியர்.                   (விலை : ரூ 115)                   (விகடன் பிரசுரம்)

முருகன் அல்லது அழகு - திரு.வி.கல்யாணசுந்தரனார்

______________________________ முருகன் அல்லது அழகு (திரு.வி.கல்யாணசுந்தரனார்) _______________________________          இந்நூல் முருக வழிபாட்டில் கிளர்ச்சியையும், எழுச்சியையும் செய்த நூல். முருகு என்னும் சொல் மணம், இளமை, அழகு, கடவுள் தன்மை என விளக்கப்படுகிறது.         இயற்கை எழில் இறைவடிவாகக் காட்டப்பட்டுள்ளது.          தமிழர் கடவுள் கொள்கையை, வழிபாட்டு நெறியை, முருக வழிபாட்டின் தொன்மையை, நன்மையை, தூய்மையை அழகோவியமாக்கியுள்ளார் திரு.வி.க ..        திரு.வி.க செந்தமிழை செழுமை படுத்திய செம்மல்..மொழிமேடையில் வீசிய தென்றல்.. எழுத்துலகில் இமயம்..அவரின் படைப்புகள் படித்து போற்றத்தக்கவை..             (விலை : ரூ 30)             (மணிவாசகர் பதிப்பகம்)

கதை அரங்கம் - 1

_____________________________ கதை அரங்கம் - 1 _____________________________        11 சிறுகதைகள் உள்ள தொகுப்பு இந்நூல். இன்றைய தலைமுறையில் உள்ள எழுத்தாளர்களின் நல்ல சிறுகதைகள் அடங்கியது         அகிலன் அவர்களின்,  "நினைப்பு " கு.அழகிரிசாமியின்  "காற்று "  நா.பார்த்தசாரதியின் "நெருப்புக்கோழிகள் " தி.ஜா வின் " முள்முடி ", ஜெகசிற்பியன் "நித்திய ஓய்வு " ஜெயகாந்தனின்  "நான் இருக்கிறேன் " உள்பட 11 சிறுகதைகள் உள்ளன.         ஏற்கனவே பத்திரிகைகளில் வெளிவந்த கதைகள் தான் என்றாலும், இவை மீண்டும் மீண்டும் அலுப்பின்றி படித்து சிந்திக்கத்தக்கவை.        ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு விதத்தில் மணிக்கதைகளாக விளங்குபவை.               (விலை : ரூ 05 )(1978 ல்)               (மீனாட்சி புத்தக நிலையம்)          

உறவின் குரல் - லட்சுமி

 உறவின் குரல் (லட்சுமி) ____________         ராணி வாரஇதழில் தொடர்கதையாக வெளிவந்தது. ஒவ்வொரு நாளும் நிகழும் மாற்றங்களை - நிகழ்ச்சிகளை ஆசிரியரின் எழுத்துகள் - பாத்திர படைப்புகள் உணர்த்தும்.        "உறவின் குரல் " மூலம் பாட்டுக்கொரு புலவன் பாரதியின் புதுமைப் பெண்ணை "விமலா " என்ற பெயரில் பாத்திரமாக்கியுள்ளார்.        உணர்வுகளுக்கு உருவம் கொடுத்து, இலக்கிய நயத்தின் சுவை குறையாமல் வாசிக்கும் ரசிகர்களை மகிழ்வுறச் செய்துள்ளார்.                 (விலை : ரூ 80)                 (பூங்கொடி பதிப்பகம்)

பாரதிதாசன் - முருகு சுந்தரம்

பாரதிதாசன் (முருகு சுந்தரம்) _____________________________       பாரதிதாசனாரின் பெருமையினை விவரிக்கும் நூல் இது.         கல்வியும் ஆசிரியப் பணியும், பாரதியும் தாசனும், தேசியக்கவி, புரட்சிக் கவி, தமிழ் மறவர், இயற்கை கவிஞர், மனித நேயர், பெண்ணுரிமை பேணியவர், திரைப்பட நாடக எழுத்தாளர், இதழாசிரியர் என்ற தலைப்புகளில்  அந்தந்த தலைப்புகளுக்கு ஏற்றவாறு அவர் எழுதிய நூல்களிலிருந்து கருத்துகள் தொகுக்கப்பட்டுள்ளன.        தமிழின் சிறப்பு, வளம், இன்றைய நிலை, அதை முன்னேற்றும் வழிமுறைகள் இவற்றை ஆய்ந்து முதன்முதலாக  கவிதை நூலாக (தமிழியக்கம்)  எழுதிய பெருமை பாரதிதாசனையே சாரும்.        பெண் விடுதலை, சமுதாய சீர்திருத்தம், மடமை ஒழிப்பு, பொருளாதாரச் சமன்மை ஆகிய குறிக்கோளுக்காக ஓயாமல் குரல் கொடுத்த ஒப்பற்ற கவிஞனின் புகழ்பாடும் இந்நூலை எல்லோரும் வாசிப்போம்.         (விலை : ரூ 25)         (சாகித்ய அகாதெமி பதிப்பு)

சத்திய சோதனை( காந்தியடிகள்) தமிழில்..ரா.வேங்கடராஜீலு

தினம் ஒரு புத்தகம் _____________________________ சத்திய சோதனை ( காந்தியடிகள்) தமிழில்..ரா.வேங்கடராஜீலு  _____________________________       காந்தியடிகளின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் நூல்.இளம் வயது முதல் 1921 ஆம் ஆண்டு வரையிலான தம் சரிதையை எழுதியுள்ளார்.       தன்னுடைய வாழ்வு முழுவதும் ஓர் ஆய்வாளனின் ஆய்வுப்பயணம் போல எனக் குறிப்பிட்டிருக்கும் காந்தி தன் வாழ்க்கையை திறந்த புத்தகம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.       நாம் வாழ்கின்ற இன்றையச் சமுதாயத்தில் தோன்றுகின்ற அரசியல், பொருளாதார, சமுதாய, சமயச்சிக்கல்கள் பெரும்பாலான மக்களை மூச்சுத் திணறச் செய்கின்றன.வாழ்க்கையில் நம்பிக்கை இழந்து பலர் சோர்ந்து விடுகின்றனர்.           சோதனைகளைக் கண்டு அஞ்சாமல் செயல்படுபவர்கள் வாழ்க்கையை ஓர் அரும்பெரும் சாதனைகளாக மாற்றிக் கொள்ள முடியும்.இதற்கு காந்தியடிகளின் வாழ்க்கை ஓர் எடுத்துக்காட்டு ..             (நவஜீவன் பிரசுராலயம்)

நினைவு அலைகள் - நெ.து.சுந்தரவடிவேலு

 நினைவு அலைகள் (நெ.து.சுந்தரவடிவேலு) __________        நெ.து.சு.அவர்கள் சிறந்த கல்விச் சிந்தனையாளர்.சாமான்ய மக்களுக்கும் கல்விக் கண்கொடுத்து கரையேற்றி வாழ்வளிக்க வேண்டும் என்ற தொண்டுள்ளத்தோடு பணியாற்றிய பெருந்தகை.         ஆசிரியர் தம் வாழ்க்கை வரலாற்றை, தம் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்வுகளை, உலகைப் பலமுறை வலம் வந்து பெற்ற அனுபவங்களை, தன் வாழ்வில் சந்தித்த மனிதர்களை, தலைவர்கள் பற்றியெல்லாம் "சத்ய கங்கை " பத்திரிகையில் "நினைவு அலைகள் " என்ற தலைப்பில் எழுதினார்கள்.அதன் தொகுப்பே இந்நூல்.           இந்நூல் நெ.து.சு அவர்களின் தன் வரலாறு மட்டுமல்ல..தமிழ்நாட்டின் வரலாற்று நிகழ்ச்சிகள் அத்தனையும் அடங்கிய தகவல் களஞ்சியம் ..மூன்று தொகுதிகளாக வெளியிட்டுள்ளனர்.                 (வானதி பதிப்பகம்)

சாயாவனம் - சா.கந்தசாமி

 சாயாவனம் (சா.கந்தசாமி) __________          தஞ்சை மாவட்டத்தில் சிறிய ஊரான சாயாவனத்தில் காட்டை அழித்து ஆலைகட்டும் சிதம்பரம்.காட்டை அழிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு முதலியவற்றைப் பற்றி பேசும் புதினம்.         சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னால் சுற்றுச்சூழல் பற்றி அதிகம் பேசப்படாத காலத்தில், இயற்கையுடனான மனிதனின் போராட்டத்தை மையமாக வைத்து கிராமியப் பின்ணணியில் எழுதப்பட்டது.        வாசிப்பவரை கானகத்தின் உள்ளே அழைத்துச் சென்று அதன் ரகசியங்களை அறிந்து கொள்ள வைக்கும் அற்புத அனுபவத்தை அளிப்பது இப்படைப்பின் உண்மையான வெற்றி.         தமிழக கிராமங்களின் வாழ்வியல் முறைகள், பொருளாதார சிக்கல்கள், உறவுகள் பற்றிய சுவாரசியமான பதிவு இந்நூல்.                 (விலை : ரூ 225)                 (காலச்சுவடு பதிப்பகம்)     

சிறிது வெளிச்சம் - எஸ்.ராமகிருஷ்ணன்

 சிறிது வெளிச்சம் (எஸ்.ராமகிருஷ்ணன்) __________      குடும்பம், அலுவலகம், நண்பர்கள் என்ற பல்வேறு உறவுகள்தான் நமது உணர்வுகளுக்கு வேண்டிய பலத்தை அளிக்கிறது.      அன்றாடம் நாம் சந்திக்கும் பல மனிதர்களின் குணங்களையும், உணர்வுகளையும் அடிப்படையாக வைத்து உறவுப்பாலம் அமைத்துள்ளார் எஸ்.ரா அவர்கள்.        ஆனந்தவிகடன் இதழில் " சிறிது வெளிச்சம் " என்ற தலைப்பில் வெளிவந்தது, வாசகர்களின் இதயக்கதவை திறந்த கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.      வாழ்க்கையில் என்னவெல்லாம் செய்ய தவறி இருக்கிறோம் என்பதையும், கிடைத்த வாய்ப்புகளை எப்படியெல்லாம் இழந்திருக்கிறோம் என்பதையும், நம்மை நாமே பார்த்து..சீர்படுத்திக் கொள்ளும் கண்ணாடியாக இந்தக் கட்டுரைகள் பிரதிபலிக்கின்றன.                 (விலை : ரூ 450)                 (தேசாத்திரி பதிப்பகம்)

தமிழ் விருந்து - ரா.பி.சேதுபிள்ளை

 தமிழ் விருந்து (ரா.பி.சேதுபிள்ளை) ___________        இலக்கிய பசி மிக்கவர்களுக்கு இனிய உணவு  "தமிழ் விருந்து " என்னும் இந்நூல்.        சென்னை, திருச்சி வானொலி நிலையங்களில் ஆசிரியர் நிகழ்த்திய 18 சொற்பொழிவுகள் இந்நூலில் உள்ளன.        தமிழ்க் கலையின் தன்மை, தமிழ் இலக்கியத்தின் சீர்மை, தமிழ் மொழியின் செம்மை, தமிழரது வாழ்க்கையின் மேன்மை - இவை நான்கு கூறுகளாக இந்நூலில் காணப்படும்.       இனிமையான..சுவையான இவ்விருந்தை உண்டு மகிழுங்கள்..                  (விலை : ரூ 45)                  (சீதை பதிப்பகம்)     

தாவோ தே ஜிங் - லாவோட்சு தமிழில்..சந்தியா நடராசன்

 தாவோ தே ஜிங் (லாவோட்சு) தமிழில்..சந்தியா நடராசன் __________        விடுதலை..நதியின் பிறப்புரிமை..தேங்கிய நீரின் இயல்பு நசுங்கிக் கிடக்கிறது. நீரலைகளே நதியின் ஜீவன்.        நதியைப் போலத்தான் வாழ்வு இருக்க வேண்டும் என்கிறார் லாவோட்சு.ஓடும் நதி உன்னத வாழ்க்கைக்கு உவமை ஆகிறது.தன்னியல்பில் தளைகள் அற்று வாழும் வாழ்க்கைக்குத்தான் ஓடும் நதி குறியீடு.        வாழ்வுக்கு நோக்கம் என்று ஒன்றில்லை.நிகழ்வது எதுவோ அதன்படி வாழ்வது மேல், என்ற நிலைப்பாடுதான் லாவோட்சுவின் வாழ்வியல் முறை.                  (விலை : ரூ 200)                  (சந்தியா பதிப்பகம்)

புதுமைப்பித்தன் சிறுகதைகள் - புதுமைப்பித்தன்

______________________________ புதுமைப்பித்தன் சிறுகதைகள் (புதுமைப்பித்தன்) _______________________________         "கருத்தின் வேகத்தை பிரதானமாகக் கொண்டு, தாவிச் செல்லும் நடை " புதுமைப்பித்தனுக்கே உரியது.       பல சந்தர்ப்பங்களில், பலவேறு மனப்பான்மைகளில் அவர் எழுதியுள்ள பல்வகைப்பட்ட கதைகளில் 16 கதைகளின் தொகுப்பு இந்நூல்.        இவரின் எழுத்து மனிதனையும், அவனுடைய வாழ்க்கையையும் பற்றிய ஆழ்ந்த, பரந்த நோக்கையும், முதிர்ந்த சிந்தனையையும் உள்ளடக்கியது.         இத்தொகுப்பில், "காஞ்சனை " "சாப விமோசனம் " கடவுளும் கந்தசாமிபிள்ளையும் " "கயிற்றரவு "  போன்ற அவருடைய சிறந்த கதைகள் பல உள்ளன.          " இலக்கியத்தில் கலையம்சம் என்பது ஜீவத்துடிதுடிப்பில்தான் இருக்கிறது " என்ற ஆசிரியரின் கூற்றுக்கு விளக்கமாக இக்கதைகள் ஒவ்வொன்றும் அமைந்துள்ளன.              (விலை : ரூ 07)(1976 ல்)               (பாரி நிலையம்)

நல்ல குடும்பம் நமது இலட்சியம் - சுகி.சிவம்

நல்ல குடும்பம் நமது இலட்சியம் (சுகி.சிவம்) ___________        "நல்ல குடும்பம் நமது இலட்சியம் " முதல் "குடும்பத்தை கோயிலாக்கும் "  ஈறாக 35 கட்டுரைகள் இந்நூலில் உள்ளன.        குடும்பம் என்ற நிறுவனத்தின் நோக்கம்.. நிகழ்கால நிம்மதி மற்றும் எதிர்கால பாதுகாப்பு ஏற்பாடு.       இந்தத் தலைமுறையின் வசதியோடு எதிர்காலத் தலைமுறைக்கான அன்பு, அரவணைப்பு, உத்திரவாதம் ஆகிய அனைத்துமே நல்லகுடும்பத்தில் கிடைக்கிறது.        குடும்ப உறவுகளை உணர்வுப் பூர்வமாக விளங்கிக் கொள்ள, உறவுகளைச் சீரமைக்க, மகிழ்வாக இல்லறம் நடத்த இந்நூல் சிறந்த வழிகாட்டி என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை.                (விலை : ரூ 80)                (கவிதா பப்ளிகேஷன்)

சந்திரவதனா - எஸ்.பாலசுப்ரமணியன்

சந்திரவதனா (எஸ்.பாலசுப்ரமணியன்) ___________        1998 ல் வெளிவந்த புதினம்.கி.பி 17ஆம் நூற்றாண்டில் நடந்த வரலாற்று நிகழ்வை மையமாக வைத்து இக்கதை எழுதப்பட்டது.       தஞ்சையை ஆண்ட விஜயராக நாயக்கர் என்னும் மன்னனின் மகள் " சந்திரவதனா " கதை நாயகி. மதுரையை ஆண்ட சொக்கநாத நாயக்கன் கதையின் நாயகன்.       அக்காலத்தில் நடந்த உண்மை சம்பவங்களை கதையில் நேரடியாகக் காட்டியதோடு அவற்றிற்கான புத்தகச் சான்றுகள் மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ளன.        இடையிடையே வரும் வேதங்கள் தொடர்பான தருக்கங்கள், சாத்திரங்கள் பற்றிய முழுமையான எளிமையான விளக்கம் சிறப்பு.       கதைப்படித்து முடித்தவுடன் குறைந்தது ஒரு வாரத்திற்கு கனத்த மனதுடன் இருப்பது.. வாசிக்கும் போது அந்த காலத்திற்கே சென்றுவிடுவது போன்ற உணர்வு..வயிறு குலுங்க வைக்கும் நகைச்சுவை இவையெல்லாம் இக்கதையின் சிறப்பு..               (நான்கு தொகுதிகள்)                (கலைஞன் பதிப்பகம்)

இளந்திரையன் கவிதைகள் - சாலை இளந்திரையன்

இளந்திரையன் கவிதைகள் (சாலை இளந்திரையன்) __________      தமிழகத்தின் பத்திரிகைகளில் வெளிவந்த கவிதைகளில் சிலவற்றின் தொகுப்பே இந்நூல். சுமார் 128 கவிதைகள் உள்ளன.வாழ்த்து, இயற்கை, அன்பு வாழ்க்கை, குமுறல், மலர்த்தோட்டம் என்ற தலைப்புகளின் அடிப்படையில் அமைந்துள்ளன.         இவர் கவிதைகள்.. எண்ணத்தின் பண்.. இதயத்தின் இசை.. உணர்வின் வடிவம்.. உண்மையின் உருவம்..         பல்சுவைப் பாடல்கள் பரவிக் கிடக்கும் நூல்..அவற்றில் சில கள்..சில கனித்தேன்..சில பால்..சில பாகு... பகலவன் வரவால் தாமரையின் செயல்..      " சோம்பல் முறித்தது தாமரை                 சுந்தரப்பள்ளி         எழுச்சி இசைத்தது நீரலை " எல்லா பாடல்களுமே இணையில்லாச் சுவை மிக்கவை .அதை வாசிப்பவர்கள் தெரிந்து கொள்வார்கள்.      (யுனிவர்ஸல் பிரிண்டிங் ஹவுஸ்)

கழுத்தில் விழுந்த மாலை - லட்சுமி

கழுத்தில் விழுந்த மாலை (லட்சுமி) ___________       இக்கதையின் நாயகி மாதங்கி தன் பெரியம்மா பெண் ஜயந்தியின் கழுத்தில் விழ இருந்த மணமாலை, அவள் திடீரென காணாமல் போனதால் இவள் கழுத்தில் வந்து விழுகிறது.      கைப்பிடித்த கணவன் ஹர்ஷனால் கண்கலங்க வைக்கப்படும் மாதங்கி .. பெங்களூர் செல்கிறாள்.தன் பத்தாம்பசலித்தனமான பழக்க வழக்கங்களிலிருந்து விடுபட்டு, பாரதி கனவு கண்ட புதுமைப் பெண்ணாக மாறுகிறாள்.        இறுதியில் ஹர்ஷன் தம் தவறை உணர்ந்து, தன் தோல்வியை அவளிடம் ஒப்புக் கொள்கிறான்.       நல்ல கதாபாத்திரங்கள், அவை சம்பந்தப்பட்ட வாழ்க்கைச் சம்பவங்கள், அன்றாடம் நாம் நம் குடும்பங்களில் நடத்தும் உரையாடல்கள் எல்லாம் இக்கதையைப் படிப்பவர்கள் யாரானாலும் அவர்போல் இதில் ஒரு கதாபாத்திரம் அமைந்திருப்பதை அவரால் உணர முடியும்.                     (விலை : ரூ 80)                     (பூங்கொடி பதிப்பகம்)

அறியப்படாத தமிழகம் - தொ.பரமசிவம்

அறியப்படாத தமிழகம் (தொ.பரமசிவம்) ____________       நாம் அறிந்த தமிழகத்தின் அறியாத பரிணாமம் இந்நூல்.      பொருட்டாக நாம் கருதாத செய்தியை எடுத்துக்கொண்டு அதில் வரலாறும், பண்பாடும் எவ்வாறு படிவம் படிவமாக படிந்துள்ளன என்பதை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.        உப்பு, எண்ணெய், தேங்காய், வழிபாடு, விழாக்கள், உறவுமுறை, உடை, உறவுப் பெயர்கள் என அன்றாட வாழ்வின் பகட்டில்லாத..பல்வேறு கூறுகளைக் கொண்டு, தமிழ் சமூகத்தின் ஈராயிரம், மூவாயிரம் ஆண்டு வரலாற்றின் அசைவியக்கம் இந்நூலில் கோடிட்டுக் காட்டப்படுகிறது.                  (விலை : ரூ 150)                  (காலச்சுவடு பதிப்பகம்)