Posts

Showing posts from July, 2020

போரும் அமைதியும்(லியோ டால்ஸ்டாய்)தமிழில்..டி.எஸ்.சொக்கலிங்கம்

______________________________ போரும் அமைதியும் (லியோ டால்ஸ்டாய்) தமிழில்..டி.எஸ்.சொக்கலிங்கம் ________________________________        ருசிய மொழியில் லியோ டால்ஸ்டாய் எழுதிய புதினம்.1869 ஆம் ஆண்டு முதன் முதலாக பதிப்பிக்கப்பட்டது.      இதிகாச அளவிலான இந்நூல் உலக இலக்கியங்களில் மிகவும் முதன்மையானதாகக் கருதப்படுகிறது.வரலாற்று மனிதர்களை நம்முடன் உறவாட வைக்கிறது.       நெப்போலியன் ருஷ்யாவைத் தாக்கி வென்று, பிறகு தோற்கடிக்கப்பட்டு மீள்கிறான். அந்த ஒரு நிகழ்வில் எத்தனை மனித வாழ்வுகள் சுழற்றியடிக்கப் படுகின்றன.       அழிவும், ஆக்கமும் ஒன்றை ஒன்று பூரணப்படுத்திக் கொள்கின்றன என்று காட்டுகிறார் ஆசிரியர்.வரலாற்றை ஒரு விசுபரூபமான தரிசனமாகக் காட்டும் இப்பெரும் படைப்புக்கு இதற்கு முன்னும் பின்னும் இணை உதாரணங்கள் இல்லை. பிரம்மாண்டமான அறிவின் சித்திரம். அது ஒரு மகத்தானக் கவிதை...              (விலை : ரூ 1600)              (மூன்று தொகுதிகள்)        ...

ஆயுதம் செய்வோம் - என்.மாதவன்

ஆயுதம் செய்வோம் (என்.மாதவன்) ___________       இந்நூல் "திருப்தியான தேர்வு " "வெளிச்சத்துக்கு வராத வேர்கள் " உள்பட 7 சிறுகதைகளின் தொகுப்பு.துளிர், வண்ணக்கதிர் போன்ற வெவ்வேறு இதழ்களில் வெளிவந்தவை.       இக்கதைகள் வகுப்பறை சார்ந்த அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டவை.      ஆசிரியர்கள் மாணவர்களைப் பார்க்கும் முறை.. மாணவர்கள் ஆசிரியர்களைப் பார்க்கும் முறை.. தேர்வுகள் ஒரு மனிதனின் உள்ளார்ந்த திறனை சோதிப்பதாக அமைய வேண்டும் என்பதையும்., எதையும் கருத்தில் கொள்ளாமல் மாணவர்களுக்கு நல்லது செய்யும் ஆசிரியர்கள் பற்றியும் ..வகுப்பறையில் நிகழும் சம்பவங்களை உற்று நோக்கி ஒரு ஆசிரியரால் எழுதப்பட்ட அற்புதமான புத்தகம்.       கல்வி சார்ந்த கருத்துகளைக் கொண்ட இந்நூலினை வாசிப்பதன் மூலம் மாணவர்களை இன்னும் புரிந்து கொண்டு, நமது வகுப்பறையை உயிரோட்டமுள்ள வகுப்பறையாக மாற்றலாம்..                   (விலை : ரூ 35)                   (பாரதி புத்தகாலயம்)

துங்கபத்திரை - பாவண்ணன்

துங்கபத்திரை (பாவண்ணன்) __________        நிகழ்வுகளாலும், நினைவுகளாலும் பின்னப்பட்ட அனுபவக் கட்டுரைகள் இத்தொகுதியில் காணப்படுகின்றன.      ஒவ்வொரு மனிதனையும், ஒவ்வொரு காட்சியையும் பாவண்ணன் எதிர் கொள்ளும் கணங்கள் மிகவும் முக்கியமானவை.      எதோ ஒருவிதத்தில் அவரது அனுபவங்கள், பரிவையும் கனிவையும் நோக்கி நம்மை அழைத்துச் செல்லும்.      கனிவும், பரிவும் அவருடைய எழுத்துலகின் மையப்புள்ளிகள்..                  (விலை : ரூ 165)                  (சந்தியா பதிப்பகம்)

எண்ணுவது உயர்வு - நா.சங்கரராமன்

எண்ணுவது உயர்வு (நா.சங்கரராமன்) _________         "அச்சம் தவிர் "துவங்கி "வவ்வுதல் நீக்கு "வரை பாரதியின் 110 புதிய ஆத்திசூடி வரிகளுக்கும் 240 பக்கங்களில் விளக்கவுரை எழுதியுள்ளார்.        செய்யுளுக்கான விளக்கவுரையில் முழுக்க முழுக்க பாரதியின் மற்ற கவிதைகள், அவை இயற்றப்பட்ட சூழல் அவர் வாழ்வில் கடைபிடித்த நெறிமுறைகளைக் கூறி விளக்கி உள்ளார்.       அச்சம் தவிர் என்றால்..அஞ்சாதே என்பது பொருள் அல்ல... மாறாய் எதிர்ப்பு, சதி, குழப்பம் போன்ற துன்பங்களுக்கு அஞ்சாமல், பழி பாவங்களுக்கு அஞ்சு என்று விளக்குகிறார்..அருமையான விளக்கங்கள்..அற்புதமான கருத்துகள்..        இந்நூலை வாசிப்பவர் பாரதியின் பல கவிதைகளை வாசித்த நிறைவு பெறுவர் .                (விலை : ரூ 180)                (விஜயா பதிப்பகம்)

பாவை விளக்கு - அகிலன்

_______________________________ பாவை விளக்கு (அகிலன்) _______________________________         ஒரு எழுத்தாளனின் உணர்ச்சிகளுக்கும், அறிவுக்கும் இடையே நடக்கும் போராட்டம்.        தீயவன் (வில்லன்) உதவியின்றியே ஒரு பெரிய புதினம் மனதைக் கவரும் முறையில் தோன்றலாம் என்பதற்குப் "பாவை விளக்கு "நல்லதோர் எடுத்துக்காட்டு.       புதினத்திற்கு வேண்டிய எல்லா  உறுப்புகளையும் தன்னகைத்தே அழகுடனும், அளவுடனும் பெற்று விளங்கும் இந்நூல், கற்பவர் நெஞ்சைக் கவர்வதுடன், கல்லாதவரையும் கற்கத் தூண்டுவதில் வியப்பில்லை...        சமுதாயச் சிந்தனையும், அதன் தாக்கமும், கலைஞர்களின் உணர்ச்சி  கொந்தளிப்புகளும்  எப்படி அவர்களைச் சுற்றி உள்ளவர்களை பாதிக்கிறது என்பதும் இயல்பாகக் கூறப்பட்டுள்ளது.                     (விலை : ரூ 350)                     (தாகம் பதிப்பகம்)

பாடுக பாட்டே - நாஞ்சில் நாடன்

_____________________________ பாடுக பாட்டே (நாஞ்சில் நாடன்) ______________________________         புலவர் என்பவர் பாடல் இயற்றுபவர் என்று அறியப்பட்டனர்.கவிஞர், கவிதாயினி என்ன பிற்காலத்தவை. பாட்டு எழுதும் ஊக்கம் உடையவர் எல்லாம் புலவரே.        கபிலர், பரணர், ஔவையார், வெள்ளிவீதியார்.... போன்ற பலர்..         வறுமையை, துன்பத்தை, இயற்கையை, வீரத்தை, கொடையை, அழகை, அறத்தை பாட்டாக பாடி வைத்தனர்.      "வித்தை விரும்பு " "தோற்பன தொடரேல் " "கற்பெனப்படுவது சொல் திறம்பாமை " "கலக்கினும் தண்கடல் நீர் சேறாகாது " என்பன பாடல் வரிகள்.        பாடுக பாட்டே என்னும் இந்தத் தொடரின் பொருள்.. சிறப்புகளை பாட்டாகப் பாடுவாயாக என்பது. சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு தமிழில் சாத்தியமான சில பாடல்களின் சிறப்புகளை இந்நூலில் பாடியுள்ளதாக ஆசிரியர் கூறுகிறார்.                   (விலை : ரூ 150)                   (விஜயா பதிப்பகம்)

புதைமணல் - லட்சுமி

_______________________________ புதைமணல் (லட்சுமி) _______________________________         சம்சார சாகரத்தின் சங்கடங்களை விட்டு சந்நியாசம் வாங்கி, அது ஒத்து வராமல் வீட்டிற்கு வந்து சோம்பேறியாக வாழும் ஊதாரித் தந்தை ..தன் இருமகள்களின் வாழ்விற்காக, தன் மகன்களிடம் பணத்தைக் உறிஞ்சும் தாய்...       கணவன் வீட்டிற்கு காசு சேர்ப்பதில் குறியாக இருக்கும் தங்கை இருவர்...இந்த அனைவரும் சேர்ந்து அழுத்த, அப்புதைமணலில் இருந்து புத்திசாலித்தனத்தால் தனியே சென்றுவிடும் அண்ணன் மித்திரன்...          தம்பி சந்திரனோ அப்புதைமணலில் இருந்து மீள முடியாமல், பெற்றோர்களின் பண ஆசையால் தாம் விரும்பிய ரஞ்சிதாவைக் கைவிட்டதோடு நோயாளி மனைவியையும் (சுபாஷினி)  பறிகொடுத்து விடுகிறான் .           மனைவியின் நினைவுகளுடன் தன் பெண்ணை வளர்த்து ஆளாக்க நினைக்கிறான் சந்திரன்.அத்துடன் கதை நிறைவடையும்.         பண ஆசையால் ஒரு குடும்பம் எப்படி துன்பப்படுகிறது என்பதை இந்நூல் உணர்த்தும்.. வாசியுங்கள்..ஏதாவது ஒரு கதாப்பாத்திரம் ந...

அகம் புறம் - வண்ணதாசன்

அகம் புறம் (வண்ணதாசன்) ___________         வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் அனுபவங்களை யாரிடமாவது பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம்.       நம்மைப் பற்றிய புரிதல்கள் கொண்டவர்களிடம் அவற்றைப் பகிர்ந்து கொள்ளும் போது, நமக்கு மகிழ்ச்சியும் மனநிறைவும் ஏற்படுகிறது.        இந்த நூலில் ஆசிரியர் தாம் சந்தித்த மனிதர்கள், சந்திக்க எண்ணிய மனிதர்கள், அன்றாட நடக்கும் நிகழ்வுகள், அவற்றை தாம் கண்ட கோலம் என்று பலதரப்பட்ட சுவாரசிய வண்ணங்களை எழுத்துத் தூரிகையால் காவிய..ஓவியமாக்கி உள்ளார் ..        ஊன்றிப் படிக்கத் தோன்றும் நெல்லை மண் வாசனையோடு, எழில் நடையால், கிராமியத் தமிழில் எழுதப்பட்ட கட்டுரைகள் வாசிப்பவரை கவர்ந்திழுக்கும் வல்லன்மை கொண்டவை.                   (விலை : ரூ 125)                   (விகடன் பிரசுரம்)

பெண்மை ஒரு வரம் - பா.ஜோதி நிர்மலா சாமி

________________________________ பெண்மை ஒரு வரம் (பா.ஜோதி நிர்மலா சாமி I A S) _________________________________        பெண் என்பவர், தன் பெற்றோர்களிடம் தாம் கற்ற கலாச்சாரத்தை, பண்புகளை தன் குழந்தைகளுக்குக் கடத்தும் கலாச்சார காவலர்கள்..       எல்லா பருவத்திலும் பெண்மையை எப்படி வரமாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதை, தனக்கு ஏற்பட்ட ..தன் குடும்பத்தில் நடந்த..பணியாற்றிய இடங்களில் நடைபெற்ற சம்பவங்களை எடுத்துக் கூறி விளக்கியுள்ளார்.        ஒரு பெண் வெற்றிகரமாக வலம் வருவதற்கு நம்மைச் சுற்றியிருக்கும் சமுதாயம் காரணம் என்பதையும், எவ்வாறு அதை வளர்க்க வேண்டும் என்பதை மிக எளிமையான நிகழ்வுகளில் வர்ணனைகளுடன் கூறியுள்ளார். "பெண்மை வரம் மட்டுமல்ல தவம் "...       சத்தான...முத்தான..30 கட்டுரைகள் உடைய அருமையான நூல்.பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் படிக்க வேண்டிய அறிவுப் பெட்டகம் இந்நூல். "புத்தகங்கள் அறிவின் வாசலைத் திறக்கும் காலக் கண்ணாடிகள் "                    (விலை : ரூ 145)     ...

திருச்சிற்றம்பலம் - ஜெகசிற்பியன்

___________________________ திருச்சிற்றம்பலம் (ஜெகசிற்பியன்) ____________________________      ஓவியர் கோபுலுவின் படங்களுடன் அற்புதமாக விகடனில் வெளிவந்து வாசிப்பவரின் உள்ளத்தை வசியப்படுத்திய புதினம்.       தில்லை நடராசர் ஆலயத்தை விரிவுபடுத்தி, பெரிதாகக் கட்ட விரும்பிய அநபாய குலோத்துங்கச் சோழன், கோயிலில் இருந்த கோவிந்தராசப் பெருமாளை அகற்றி, கடலில் அமிழ்த்த முயல, அரசகுல போட்டிப் பங்காளிகள் அந்த நிகழ்ச்சியை தமக்கு சாதகமாக பயன்படுத்தி ஆட்சியைக் கைப்பற்ற சூழ்ச்சி செய்தனர்.        இந்தப் பூசல்களின் பின்னணியில் பக்தியும் காதலும் பின்னி எழுதப்பட்ட புதினம் இது.        ஏழிசைவல்லவி, காடவராயர், பரிவாதினி, காளத்திதேவன் ..மறக்க முடியாத கதாப்பாத்திரங்கள்..                   (விலை : ரூ 225)                   (வானதி பதிப்பகம்)

கோபல்ல கிராமம் - கி.ராஜ நாராயணன்

கோபல்ல கிராமம் (கி.ராஜ நாராயணன்) ___________         பாளையக்காரர்களின் ஆட்சி முடிந்து பிரிட்டிஷ் கம்பெனியாரின் ஆட்சி முழுமையாக அமுலுக்கு வராத காலக்கட்டத்தில், புதினத்தின் நிகழ்வுகள் புனையப்பட்டுள்ளன.        மன்னர்களுக்கு அஞ்சி தெற்கு நோக்கி ஓடி வந்த குடும்பம் "கோபல்ல கிராமம் " என்னும் புதிய கிராமத்தை உருவாக்கி, பல குடும்பங்களாகப் பெருகியபின் அந்த மக்களின் பிரச்சனைகளைச் சித்தரிக்கிறது இப்புதினம்.         கரிசல்காட்டு கிராம மக்களின் பேச்சு வழக்கையும், சொல்லடைகளையும் சரளமாகக் கையாண்டு வாய்மொழிக் கதை மரபில் புதிய வடிவத்தில் உருவாக்கியுள்ளார் ஆசிரியர்.        தமிழ்நாட்டில் வாழ்ந்த முன்னோர்களின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.                (விலை : ரூ 170)                (அன்னம் பதிப்பகம்)

அர்த்தமுள்ள வாழ்வு - சுகி.சிவம்

அர்த்தமுள்ள வாழ்வு (சுகி.சிவம்) _________        சக்தி விகடனில் ஆசிரியர் எழுதிய கட்டுரைகள் இந்தப் புத்தகத்தில் உள்ளன.      "அர்த்தமுள்ள வாழ்வு "முதல் "மனதார வாழ்த்துங்கள் "ஈறாக 37 கட்டுரைகள் இந்நூலில் உள்ளன.        உண்மையான மகான்கள், ஞானத் தலைவர்கள் எப்படி இருப்பார்கள் என்பதைப் பல உதாரணங்கள், உப கதைகள், சம்பவங்கள் மூலம் படம்பிடித்துக் காட்டியுள்ளார்.        ஜென் குருமார்கள், ரமணர், ராமகிருஷ்ணர், விவேகானந்தர் போன்ற ஞான விளக்குககளை நூலெங்கும் ஏற்றி கொண்டாடி இருக்கிறார்.        தனி மனித மனக் குழப்பங்கள், அவற்றை தீர்க்க தேவையான ஆதாரங்கள் என, பற்பல செய்திகள் இந்நூலில் காணக்கிடக்கின்றன.              (விலை : ரூ 80)              (கற்பகம் புத்தகாலயம்)

தமிழகம் ஊரும் பேரும் - ரா.பி.சேதுபிள்ளை

_______________________________ தமிழகம் ஊரும் பேரும் (ரா.பி.சேதுபிள்ளை) _______________________________         தமிழகத்தில் உள்ள பெரு, சிறு நகரங்கள், சிற்றூர்கள் ஆகிய அனைத்து ஊர்ப்பெயர்களின் முக்கியத்துவத்தையும், வரலாற்றுச் சிறப்பையும் ஆசிரியர் அருமையாக ஆய்வு செய்து, அவற்றை இந்நூலில் பதிவு செய்துள்ளார்.         தமிழகத்தின் நிலவமைப்பு, நாடு, நகரங்கள்.,சிற்றூர்கள் அங்கு வாழ்ந்த முடிமன்னர்கள், மக்களின் வாழ்க்கை முறைகள் ஆகியவற்றை அறியும் முறையில் சிறப்பாக அமைந்துள்ள நூல் இது.         சரித்திரப் பின்னணி, அழகியல் உணர்வு, சுற்றுச்சூழலை மதித்துப் போற்றிய அக்கறை, பாமரமக்களின் வெள்ளந்தியான பேச்சு வழக்கு, உயரிய குறிக்கோள் முதலியவற்றை எதிரொலிக்கும் அற்புதமான நூல்..வாசிக்கும் போது அலுப்பு தட்டாத ஆய்வுப் பெட்டகம் இந்நூல்..                    (விலை : ரூ 140)                    (சீதை பதிப்பகம்)      

சித்திரப்பாவை - அகிலன்

_________________________________ சித்திரப்பாவை (அகிலன்) _________________________________          பெண்களின் மீது சமூகம் திணிக்கும் பழமை வாதங்களை எதிர்த்துப் போராடும் படைப்பு.          இப்புதினம் பற்றி அகிலன் அவர்கள் கூறும் போது .. "இன்றைய இலக்கியம் நாளைய வழிகாட்டி ..இக்கதையில் வரும் "ஆனந்தி "பற்றிய என் கருத்தை எல்லோரும் ஒப்புக் கொள்ள வேண்டும் என்பது இல்லை. சிந்தித்துப் பார்த்தால் போதும்.       நாளைக்கு இச்சமூகத்தில் மாணிக்கம் போன்ற போலிகள், அண்ணாமலை, ஆனந்தி போன்றோருக்கு துரோகம் செய்துவிட்டு வாழ முடியாத  சூழ்நிலை ஏற்பட இப்புதினம் சிறிதளவாவது தூண்டுதலாக இருக்க வேண்டும் ".என்பதே என் நோக்கம் என்கிறார்.         இந்தியாவில் சிறந்த இலக்கியத்திற்கான உயரிய விருதான "ஞானப்பீட விருது "(1975 ஆம் ஆண்டு) பெற்ற நூல் இது..                 (விலை : ரூ 400)                 (தமிழ் புத்தகாலயம்)

அஞ்ஞாடி - பூமணி

___________________________ அஞ்ஞாடி (பூமணி) ___________________________          ஒன்றரை நூற்றாண்டு காலம் தமிழகத்தில் 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் இரு பெரும் சாதிக் கலவரங்கள் ஏற்படுத்திய பாதிப்புகள் ..சமூகத்தின் ஒவ்வொரு தளத்திலும் இயங்கும் வன்முறை..மனிதர்களைப் பிரிக்கும் வன்முறையின் இடையேயும் ஒளிரும்  நட்பு .. துயரத்திலும் மாறாத மனிதநேயம் .. மண்ணையும் மனிதனையும் பிணைக்கும் அன்றாட வாழ்வின் அற்புதங்கள்..         பூமணி அவர்களின் தனித்துவமான நடையில், ஒரு விரிவான ஆய்வின் அடிப்படையில் தமிழில் முக்கியமான மற்றுமோர் புதினம்..         2014 ஆண்டு சாகித்ய அகாடமி பரிசு பெற்ற நூல்.                  (விலை : ரூ 1000)                  (க்ரியா வெளியீடு)

சிதறல்கள் - பாவண்ணன்

சிதறல்கள் (பாவண்ணன்) _________        ஆலை பூட்டப்பட்ட போது அதை நம்பி வாழ்ந்த மக்களின் படிப்படியான சிதைவுகளும், அழிவும் சித்தரிக்கப்படுகிறது.       ஆலை மூடப்பட்டவுடன் முதலாளிகள் தங்கள் வேலையை பார்க்க போய்விடுவார்கள். தொழிலாளர்கள் வாழ்வில் அடுத்தடுத்து நடக்க வேண்டி நிகழ்வுகள் நின்றுபோய் விடுகின்றன.        ஆலைமூடப்பட்டவுடன் அதில் வேலை செய்த மக்களின் அவலங்களையும், தினப்படி பிரச்சனைகளையும் பேசும் நூல்.         ஆலை அவர்களுக்கு தொழில்கூடம் மட்டுமல்ல .. மண்ணைப் போலத்தான்..அதனுடன் உணர்வு ரீதியான உறவு உண்டு.        தமிழ் மனதிற்கும், நவீன யுகத்திற்கும் உள்ள உறவை அவலச்சுவையுடன் கூறும் படைப்பு.               (விலை : ரூ 140)               (நியு செஞ்சுரி புக் ஹவுஸ்)

மழைக்காலமும் குயிலோசையும் - மா.கிருஷ்ணன்

________________________________ மழைக்காலமும் குயிலோசையும் (மா.கிருஷ்ணன்) ________________________________       காட்டுயிர்கள் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். தமிழகத்தில் காணப்பட்ட பறவைகள், விலங்குகள் பற்றிய கட்டுரைகளும், கோட்டோவியங்களும், புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளன.        எளிய நடையில் காட்டுயிர்களை அறிமுகப்படுத்துகிறார் ஆசிரியர்.பாலூட்டிகளுக்கும், பறவைகளுக்கும் சரியான தமிழ்ப் பெயர்களை இந்நூலில் காணலாம்.         இயற்கை, காட்டுயிரிகள், பறவைகள், தாவரங்கள் என சூழலியல் சார்ந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட அறிவியல் தகவல்களைக் கொண்டது.         துறை சார்ந்த எண்ணற்ற சொற்கள், அறிவியல் சுவாரஸ்யமான தகவல்கள் அடங்கிய அற்புதமான நூல் இது.             (விலை : ரூ 225)              (காலச்சுவடு பதிப்பகம்)

ஒரு புத்தகம் என்ன செய்யும்?

ஒரு புத்தகம் என்ன செய்யும்? 📚. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது நமக்கு அதுவரை தெரியாத விஷயங்கள் தெரியவரும். 📚 ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது நம்முடைய பொதுப்புத்தியில் அதுவரை தெரிந்த தகவல்கள், உண்மைகள், விழுமியங்கள், எல்லாவற்றைப் பற்றியும் கேள்விகள் உருவாகும். 📚 ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது நமது அறிவுப்பரப்பு ஒரு மில்லிமீட்டராவது விசாலமாகும். 📚 ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது நம்முடைய உணர்வுகள் கூர்மையடையும். 📚ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது நாம்  அதுவரை நம்பியிருந்த உண்மைகள் பொய்களாக மாறும். 📚ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது நம்முடைய வீடு, ஊர், மாவட்டம், மாநிலம், நாடு, இனம், மதம், சாதி, மொழி, இவையாவும் மறைந்து போகும். பிரபஞ்ச மனிதனாக உணரமுடியும். 📚ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது உலகின் எந்த மொழிபேசும் மனிதர்களின் வாழ்வை, அவர்களுடைய பண்பாட்டை, பழக்கவழக்கங்களை, அந்த மொழி தெரியாமலேயே புரிந்துகொள்ள முடியும் 📚ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது நம்முடைய மூடநம்பிக்கைகள் ஒழிந்து அறிவியல் பார்வை உருவாகும். 📚ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது சனாதனத்துக்கும் மரபுக்கும் நவீனத்துக்கும் உ...

வானவல்லி (4 பாகங்கள்) - சி.வெற்றிவேல்

வானவல்லி (4 பாகங்கள்) (சி.வெற்றிவேல்) ___________        கரிகாலன் தனக்குரிய நாட்டை மீட்டதோடு மட்டுமல்லாமல், இமயத்தில் புலிக்கொடி நாட்டிய அவனது வெற்றியையும் விவரிக்கும் புதினமே "வானவல்லி "..         முதல் பாகம் வேளிர்களின் எழுச்சி..இரண்டாம் பாகம் யவன நிலா..மூன்றாம் பாகம் கரிகாலன் எழுச்சி ..நான்காம் பாகம் இமயத்தில் புலிக்கொடி நாட்டுதல்...        நாயகன் - செங்கு வீரன்..        நாயகி     - வானவல்லி இக்கதையில், தேவையான இடத்தில் கொடுக்கப்பட்டுள்ள வரைபடங்களும், போர் வீயூகங்களை விவரிக்கும் விளக்கப் படங்களும் நம்மைக் கதையோடு ஒன்றச் செய்கின்றன.         சுருங்கச் சொன்னால்..கதை வாசிக்கும் போது நாம் அக்காலத்தில் வாழ்வது போன்ற ஒரு எண்ணத்தை ஏற்படுத்துகிறது.அதுவே இந்நூலின் வெற்றி...               (விலை : ரூ 2000)               (வானதி பதிப்பகம்)

என் கதை - நாமக்கல் கவிஞர் இராமலிங்கம்

__________________________________ என் கதை (நாமக்கல் கவிஞர் இராமலிங்கம்) ___________________________________         சுதந்திரப் போராட்ட வீரரும், மிகச்சிறந்த கவிஞருமான நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அவர்களின் சுயசரிதம் இந்நூல்.        20 ஆம் நூற்றாண்டில் வெளிவந்த சிறந்த சுயசரிதை நூல்களில் கவிஞரின் "என் கதை " யும் ஒன்று .        பாரதியார், ஈ.வெ.ரா, ராஜாஜி, திரு.வி.க ..போன்ற சான்றோரின் நட்பைப் பெற்றவர். "ஆடுக ராட்டே.. சுழன்று ஆடுக ராட்டே .."என்றுப் பாடி தமிழ்நாட்டையே சுழன்று ஆட வைத்தவர்.பல அற்புதமான பாடல்களை பாடியவர்.       அவர் வாழ்க்கையில் நடந்த பல முக்கிய சம்பங்களை உள்ளடக்கிய நூல். அவசியம் எல்லோரும் வாசிக்க வேண்டிய நூல்.                  (விலை : ரூ 175)                  (பூம்புகார் பதிப்பகம்)

அகவிழி திறந்து - கண்ணன்

____________________________ அகவிழி திறந்து (கண்ணன்) _____________________________        பத்திரிகை, பதிப்பகம் வாழ்க்கையில் ஏற்பட்ட தன் அனுபவத்தை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வகையில், ஆசிரியர் சுவையான மொழியில் எழுதிய பத்திகளின் தொகுப்பு  "அகவிழி திறந்து ".        2007- 2010 காலச்சுவடு மாத இதழில் இதே தலைப்பில் வெளிவந்தவை.       உலகப்பார்வை, உண்மைத்தேட்டம், மொழி நவீனம் ஆகியவற்றோடு சுவை மிகுந்த சொல் முறையும் அகவிழி திறப்பு முயற்சியில் இவருக்கு உதவுகின்றன.                  (விலை : ரூ 100)                  (காலச்சுவடு பதிப்பகம்)

பேசும் பொம்மைகள் - சுஜாதா

____________________________ பேசும் பொம்மைகள் (சுஜாதா) _____________________________       ஒரு மனித மனத்தின் அத்தனை எண்ணங்களையும் ஒரு இயந்திரத்திற்குள் மாற்றி புகட்ட முடியுமா? என்று பலர் வியந்தனர்.        சாத்தியமில்லை என்றாலும், அமெரிக்கா போன்ற முன்னேற்ற நாடுகளில் முற்போக்கு ஆராய்ச்சி நிலையங்களில் "செயற்கை அறிவு " என்ற இயலில் ஒரு பிரிவாக இந்த ஆராய்ச்சிகள் சிறிதளவு வெற்றி பெற்றிருக்கிறது.         இந்த வெற்றியின் ஒரு கற்பனை விரிவாக்கம்தான் "பேசும் பொம்மைகள் "..                  (விலை : ரூ 180)                  (உயிர்மை பதிப்பகம்)

வீடில்லா புத்தகங்கள் - எஸ்.ராமகிருஷ்ணன்

_____________________________ வீடில்லா புத்தகங்கள் (எஸ்.ராமகிருஷ்ணன்) _____________________________        சாலையோரக் கடைகளில் விற்கப்படும் பழைய புத்தகங்களை "வீடில்லா புத்தகங்கள் "  என்பார்..பெண் எழுத்தாளர் "வர்ஜினியா வுல்ப் " .        நாம் அறிந்திராத பல அரிய நூல்களை அறிமுகம் செய்து வைக்கிறது இந்நூல்.       இந்நூலின் மூலம் குறைந்தது 170 புத்தகங்களை அறிமுகம் செய்து வைக்கிறார் எஸ்.ரா. அவர்கள்.        சிறப்பு என்னவெனில் இப்புத்தகங்கள் ஒவ்வொன்றும் பல்வேறு துறை சார்ந்து எழுதப்பட்ட அற்புதமான நூல்கள்.ஆதலால் நாம் பல துறைகளில் ஆழ்ந்த அறிவை வளர்த்துக் கொள்வதற்கான வாசலாக அமைகிறது.          பழைய புத்தகக் கடையில் பல அரிய நூல்களை வாங்கியதாகவும், அவற்றை அறிமுகம் செய்யலாம் என்று "வீடில்லா புத்தகங்கள் " தொடரை எழுதியதாகவும் கூறுகிறார் ஆசிரியர்.         இளைய சமுதாயத்தினர் அவசியம் வாசிக்க வேண்டிய நூல். வாசிப்பை நேசிப்பவர்களுக்கு இந்நூல் வரப்பிரசாதம் ..         ...

அங்கும் இங்கும் - நெ.து.சுந்தரவடிவேலு

______________________________ அங்கும் இங்கும் (நெ.து.சுந்தரவடிவேலு) ______________________________      சோவியத் ரஷ்யாவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் சுற்றுப்பயணம் செய்த போது தமக்கு ஏற்பட்ட அனுபவங்களை விவரித்துள்ளார் நெ.து.சு அவர்கள்.       சிறந்த கல்வி அதிகாரியான அவர் சோவியத் ஒன்றியத்தின் முன்னேற்றங்களையும், அம்மக்களின் வாழ்க்கை முறைகளையும் வியந்து பாராட்டியிருக்கிறார்.       மேலும் அம்மக்களுக்கு அங்கு எவ்வாறு கல்வி கற்பிக்கப்படுகிறது, விஞ்ஞான, தொழில்நுட்பக் கல்வியை  எவ்வாறு சாதாரண மக்களும், பயின்று பட்டம் பெற முடிகிறது என்பதை விவரிக்கிறார்.       உலகின் பெரிய நூலகங்களில் ஒன்றான "லெனின் நூலகத்தின் " சிறப்புகள், வியக்கத்தக்க வகையில் எவ்வாறு சிறப்பாக அமைந்துள்ளது என்பதையும்,தமக்கே உரிய நடையில் சித்தரித்துள்ளார்.                  (விலை : ரூ 40)                  (சீதை பதிப்பகம்)